/

பலூசிஸ்தான் பயங்கரவாதிகளுடன் பேச்சா?: சீனா மறுப்பு

சீனா, பாகிஸ்தான் இடையே பொருளாதார வழித்தடத் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்தவில்லை என்று சீனா மறுத்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:44 pm

DIN

சீனா, பாகிஸ்தான் இடையே பொருளாதார வழித்தடத் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்தவில்லை என்று சீனா மறுத்துள்ளது.
சீனா-பாகிஸ்தானை ரயில், சாலை, எண்ணெய் குழாய் மற்றும் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் இணைக்கும் பொருளாதார வழித்தடத் திட்டத்தை சீனா மேற்கொண்டு வருகிறது. இருநாடுகளின் எல்லை வழியாக 3,000 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் இத்திட்டம் பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகவும் அமைகிறது. இது தொடர்பாக தனது எதிர்ப்பை சீனாவிடம் இந்தியா ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் பொருளாதார வழித்தடத்திட்டத்துக்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக பலூசிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சீன அரசு ரகசியமாக பேச்சு நடத்துவதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங்கிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'நீங்கள் கூறுவதுபோன்ற எந்தத் தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. பொருளாதார வழித்தடத்தின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான்அரசுடன்தான் சீனா பேச்சு நடத்தி வருகிறது. பொருளாதார வழித் தடத்தையும், அதற்காக பாகிஸ்தானில் பணியாற்றி வரும் சீனத் தொழிலாளர்களையும் பாகிஸ்தான் அரசு முழுமையாகப் பாதுகாத்து வருகிறது' என்றார்.
தொடர்ந்து, இந்திய எல்லையில் வான் பாதுகாப்பை சீனா பலப்படுத்துவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, 'இது தொடர்பாக சீன ராணுவத்திடம்தான் கேட்க வேண்டும். வெளியுறவு அமைச்சகத்துக்கு இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. எல்லையில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ வேண்டும். இந்திய-சீன நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியத் தரப்பு சீனாவுடன் இணைந்து பணியாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று அவர் பதிலளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.