சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பாகிஸ்தான்: மத நிந்தனை வழக்கில் பெண்ணுக்கு மரண தண்டனை: மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நிறுத்திவைப்பு

பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் பெண்,

News image

குழந்தைகளுடன் ஆசியா பீவி (கோப்புப் படம்)

Updated On :9 அக்டோபர் 2018, 12:57 am IST


பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் பெண், அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அந்த நீதிமன்றம் திங்கள்கிழமை நிறுத்தி வைத்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஷேக்குபாரா மாவட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசியா பீவி. அந்த கிரமாத்தில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த அவரது குடும்பம்தான், அந்த கிராமத்தின் ஒரே கிறிஸ்துவக் குடும்பமாக இருந்து வந்தது.
பண்ணை வேலை செய்து வந்த அவர், கடந்த 2009-ஆம் ஆண்டில் சக பெண் பணியாளர்களுடன் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு பாத்திரத்தைப் பயன்படுத்தி நீர் அருந்தினார். அதற்கு, அங்கிருந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, ஏற்கெனவே ஆசியா பீவியோடு முன் விரோதம் கொண்டிருந்த ஒரு பெண், இதுகுறித்து அவரிடம் கடுமையாகப் பேசியதையடுத்து இருவருக்கும் இடையே காராசாரமான விவாதம் ஏற்பட்டது. அதில், முகமது நபியைப் பற்றி ஆசியா தவறான கருத்துகளைக் கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விவகாரம் வெளியில் கசிந்ததும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் ஆசியா பீவியை கடுமையாகத் தாக்கியது. அதையடுத்து, அவரை போலீஸார் காப்பாற்றி கைது செய்தனர்; அவர் மீது மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஷேக்குபாரா மாவட்ட நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத்து கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டத்தின்கீழ், ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதுவே முதல் முறை ஆகும்.
அந்தத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த லாகூர் உயர் நீதிமன்றம், ஆசியா பீவிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.
அந்தச் சூழலில், பஞ்சாப் மாகாண ஆளுநராக இருந்த சல்மான் தஸீர் ஆசியா பீவிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போதைய அதிபராக இருந்த ஆசிஃப் அலி ஜர்தாரியும் ஆசியாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையடுத்து, அத்தகைய பொதுமன்னிப்பு எதுவும் வழங்கக் கூடாது என்று லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், ஆசியா பீவிக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆளுநர் சல்மான் தஸீரை, அவரது பாதுகாவலரே கடந்த 2011-ஆம் ஆண்டு சரமாரியாக சுட்டுக் கொன்றார். அதையடுத்து இந்த விவகாரத்தில் ஆசியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க பலருக்கும் அச்சம் ஏற்பட்டது.
இந்த் சூழலில், ஆசியா பீவிக்கு விதிக்கப்ப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, ஆசியா பீவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், ஆசியாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த சாட்சிகள், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருப்பதை சுட்டிக் காட்டினர்.
விசாரணைக்குப் பிறகு, வழக்கின் மீதான தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், தீர்ப்பு வருவதற்குள் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று ஊடகங்களிடம் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நிராகரித்தால், அதிபரிடம் கருணை மனு அளிப்பதைத் தவிர ஆசியா பீவிக்கு வேறு வழியில்லை. அந்த முயற்சியும் தோல்வியடைந்தால், கடந்த 1980-களில் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜியாவுல் ஹக்கால் கடந்த 1980-களில் இயற்றப்பட்ட மத நிந்தனைச் சட்டத்தின்கீழ் முதல் முறையாக ஆசியா பீவி தூக்கிலிடப்படுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.