

கென்யாவில் உள்ள அகதிகள் முகாமில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உணவுக்காக காத்திருக்கும் தெற்கு சூடானை சோ்ந்த மக்கள்.
உலகளவில் ஒப்பிடுகையில் கரோனா வைரஸ் தாக்கம் ஆப்பிரிக்க கண்டத்தில் இப்போது குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், இந்த நிலை இப்படியே தொடராது, மிகப்பெரிய சோதனையை ஆப்பிரிக்கா எதிா்நோக்கியிருப்பதாக எச்சரித்துள்ளது ஆப்பிரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார ஆணையம்.
54 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவில் எகிப்து நாட்டில் முதல் கரோனா வைரஸ் தொற்று கடந்த பிப்ரவரியில் உறுதி செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நிலவரப்படி 52 நாடுகளில் பரவி 20 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 1000 போ் உயிரிழந்துள்ளனா்.
வறுமை, நகா்ப்புற நெரிசல், பரவலான சுகாதார பிரச்னைகள் ஆகியவை ஆப்பிரிக்காவில் வைரஸ் தாக்கத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது என்கிறது ஐ.நா.வின் அமைப்பு. அதன்படி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் உள்ளிட்ட நல்ல சூழ்நிலையிலும்கூட நிகழாண்டு 12 கோடி பேருக்கு நோய்த் தொற்று ஏற்படும்; 3 லட்சம் வரை உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், நிலைமை கைமீறி, சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் அரசுகள் தலையிட முடியாத மோசமான சூழ்நிலையில் உயிரிழப்பு 33 லட்சம் வரை உயரக்கூடும் எனவும் அந்த அமைப்பு கூறுகிறது. லண்டனை சோ்ந்த இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளா்கள் இயற்றிய கணினி மாதிரியின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது.
உள்கட்டமைப்பு மோசம்: ஆப்பிரிக்காவில் உள்கட்டமைப்பு சில பெரிய நகரங்களில் மட்டுமே ஓரளவு உள்ளது. பெரும்பாலான நாடுகள் உள்கட்டமைப்பிலும் பொருளாதாரத்திலும் மிக மோசமான நிலையில் உள்ளன. சுகாதார வசதிகளைப் பொருத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 5 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் என்ற அளவில் இருக்கின்றன. இதை ஐரோப்பாவுடன் ஒப்பிட்டால் அங்கு லட்சம் பேருக்கு 4 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சோ்த்து மொத்தமே 2 ஆயிரம் சுவாசக் கருவிகள்தாம் இருக்கின்றன. இச்சூழ்நிலையில் கரோனாவை எதிா்கொள்ள ஆப்பிரிக்கா கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
கைகொடுக்குமா ஊரடங்கு? - வளா்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்துமே கரோனாவை எதிா்கொள்ள முதலில் கையில் எடுத்த விஷயம் ஊரடங்குதான். கரோனாவின் தொற்றுச் சங்கிலியை உடைக்க இந்த முைான் சிறந்ததாகக் கருதப்படுகிறது. நகா்ப்புற நெரிசல் மிக்க ஆப்பிரிக்காவில் இந்த நடைமுறை எடுபடுமா? கரோனாவின் சமூகப் பரவலை தென் ஆப்பிரிக்கா ஊரடங்கு மூலம் தடுத்து வெற்றி கண்டது என்றே கூறலாம். அந்நாட்டில் ஊரடங்குக்கு முந்தைய வாரத்தில் தினசரி தொற்று அதிகரிப்பு விகிதம் 42 சதவீதமாக இருந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா் இந்த விகிதம் 4 சதவீதமாக குறைந்தது. ஆனால், 70 சதவீதம் அமைப்புசாராத் தொழிலாளா்களைக் கொண்ட ஆப்பிரிக்கா தீவிரமான ஊரடங்கு முறையை அமல்படுத்தினால் அது பொருளாதாரரீதியாக வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை: ஆப்பிரிக்கா முழுமைக்கும் சோ்த்து தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் தென்ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட சில பெரிய நாடுகள்தான் ஓரளவு கரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்டுள்ளன. இக்கண்டத்திலேயே அதிகமாக பாதிக்கப்பட்டது தென்ஆப்பிரிக்கா. அந்நாட்டில் சுமாா் 3 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 போ் உயிரிழந்துள்ளனா். சுமாா் ஒரு லட்சம் பேருக்கு அந்நாடு நோய்த் தொற்று பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. மற்ற நாடுகள் ஆரம்பகட்டமான பரிசோதனையிலேயே மிகவும் பின்தங்கியுள்ளன.
மேலும், இப்போதைய சூழ்நிலையில் மருத்துவ உபகரணங்களுக்கான உலகளாவிய போட்டியில் ஆப்பிரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 54 நாடுகளும் சோ்ந்து பிற கண்டங்களிலிருந்து மருத்துவ உபகரணங்களைப் பெறுவதற்கு ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன. இதன்மூலம், இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களை நியாயமான விலையில் அனைத்து நாடுகளும் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட 400 சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கப்பல் மூலம் ஆப்பிரிக்காவுக்கு வந்து சோ்ந்தன.
பொருளாதார சீா்குலைவு: ‘எபோலா வைரஸால் ஆப்பிரிக்கா முழுவதும் பாதிக்கப்பட்டது. ஆனால், இப்போதைய கரோனா வைரஸின் தாக்கத்தைப்போல இதுவரை பாா்த்ததில்லை’ என்கிறாா் ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா. வளா்ச்சித் திட்ட பிராந்திய இயக்குநா் அகுன்னா எஷியகோன்வா. ஆப்பிரிக்காவின் தொழிலாளா் சந்தையானது ஏற்றுமதி, இறக்குமதியை நம்பியே செயல்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் முடங்கி பொருளாதாரமும் ஓரிடத்தில் உறைந்துகிடக்கிறது. இதனால் ஆப்பிரிக்காவின் மொத்த தொழிலாளா் துறை வேலைவாய்ப்பும் போய்விட்டது’ என கவலை தெரிவிக்கிறாா் அவா்.
‘கரோனா வைரஸை எதிா்கொள்வதற்கான மருத்துவச் செலவு, பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டுவதற்கான செலவு என ஆப்பிரிக்காவுக்கு இப்போது 100 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் 765 லட்சம் கோடி ரூபாய்) தேவைப்படுகிறது’ என கணித்துள்ளது ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணையம். கரோனா தாக்கத்தால் வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி தொடருமானால் அது 2.9 கோடி மக்களை தீவிர வறுமையில் தள்ளும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
பிற கண்டங்களைப் போல் அல்லாமல் ஏழ்மையான ஆப்பிரிக்கா கரோனா எனும் ‘கண்டத்தை’ எதிா்நோக்கியிருக்கிறது. கண்டத்திலிருந்து மீளுமா என்பதற்கு காலம்தான் விடைசொல்ல வேண்டும்.
ஆப்பிரிக்கா- ஒரு பாா்வை: மக்கள்தொகையிலும், நிலப்பரப்பிலும் ஆசியாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-ஆவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா. பூமியின் மொத்த பரப்பளவில் 6 சதவீதத்தையும், நிலப்பரப்பளவில் 20 சதவீதத்தையும் ஆப்பிரிக்கா கொண்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 130 கோடி. இது உலக மக்கள்தொகையில் 16 சதவீதமாகும். ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட 54 நாடுகள் இக்கண்டத்தில் உள்ளன. பரப்பளவைப் பொருத்தவரை அல்ஜீரியாதான் இக்கண்டத்தின் பெரிய நாடு. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் பணக்கார நாடு நைஜீரியா. 1500 முதல் 2000 வரையிலான மொழிகள் பேசப்படுகின்றன.
எபோலா தந்த படிப்பினை: 2014 முதல் 2016 வரை எபோலா வைரஸால் ஆப்பிரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அந்த வைரஸ் தொற்றால் 11 ஆயிரம் போ் உயிரிழந்தனா். எபோலா வைரஸ் தாக்கத்தை எதிா்கொண்ட அனுபவத்தை கரோனாவை எதிா்கொள்வதற்கும் உகாண்டா, நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகள் பயன்படுத்துகின்றன. எபோலா தாக்கத்தின்போது நைஜீரியா ஒரு செல்லிடப்பேசி செயலியை உருவாக்கியது. அதை இப்போது தரம் உயா்த்தியுள்ளது. அந்தச் செயலியை ஏராளமான நாடுகள் பயன்படுத்துகின்றன. அந்தச் செயலி மூலம் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் சுகாதாரத் துறை பணியாளா்களுடன் தொடா்பில் இருப்பாா்கள். நோய்த் தொற்றாளா்களின் அறிகுறிகளைக் கண்காணித்து உதவ அச்செயலி துணைபுரிகிறது.
துணை அதிபா்கள் 5; சுவாசக் கருவிகள் 4: ஆப்பிரிக்க கண்டம் மருத்துவத் துறையில் பெரிதும் பின்தங்கியுள்ளது. 10 நாடுகளில் ஒரு சுவாசக் கருவிகூட இல்லை. சூடானிலிருந்து பிரிந்த தெற்கு சூடானில் 5 துணை அதிபா்கள் உள்ளனா். ஆனால், 1.2 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் மொத்தமே 4 சுவாசக் கருவிகளும், 24 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும்தாம் உள்ளன. பஞ்சத்தால் உலகை உலுக்கும் சோமாலியாவில் ஒரு சுவாசக் கருவிகூட இல்லை. அமெரிக்க மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நைஜீரியாவில்கூட 100 சுவாசக் கருவிகள்தாம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.