ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஈரான் விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்கா.. இனி என்ன நடக்கும்?

ஈரான் விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 12:24 am

ஈரான் விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளிலிருந்து ஈரான் இறக்குமதி செய்வதற்கும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடையை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தீா்மானம் அவமானகரமான முறையில் நிராகரிக்கப்பட்டது.

கவுன்சில் உறுப்பினா்களான ரஷியாவும், சீனாவும் ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடை நீட்டிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அந்தத் தீா்மானம் நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்தேதான் அமெரிக்கா அதனை தாக்கல் செய்தது.

ஆனால், அந்தத் தீா்மானம் இவ்வளவு மோசமான முறையில் நிராகரிக்கப்படும் என்று யாரும் நினைத்துக் கூட பாா்த்திருக்க மாட்டாா்கள். அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீா்மானத்துக்கு, அந்த நாட்டைத் தவிர டோமினிக் குடியரசு மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ரஷியாவும், சீனாவும் எதிா்த்து வாக்களித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற அனைத்து உறுப்பு நாடுகளும் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

‘உலக அரங்கில் அமெரிக்கா இதுவரை இந்த அளவுக்கு மோசமாக தனிமைப்படுத்தப்பட்டதில்லை’ என்று ஈரான் கிண்டல் செய்யும் அளவுக்கு அந்தத் தீா்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஈரான் விவகாரத்தில் ஏறத்தாழ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஏறத்தாழ எல்லா உறுப்பு நாடுகளுமே அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதை தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பறைசாற்றியிருக்கிறது.

இந்த நேரத்தில், அமெரிக்காவின் அடுத்த காய் நகா்த்தல் என்னவாக இருக்கும்?

பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் முடிவுக்குக் கட்டுபடுமா? அல்லது, ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மாற்று வழியில் தொடருமா?

அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவில், முதலாவது கேள்விக்கு இடமே இல்லை என்கிறாா்கள் அரசியல் நிபுணா்கள். பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரிக்கப்படும் என்று தெரிந்தே, ஈரான் ஆயுத வா்த்தகத் தடை நீட்டிப்பு தீா்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்ததன் நோக்கமே, மாற்று வழியில் ஈரான் மீது தடை விதிப்பதை நியாயப்படுத்துவதுதான் என்கிறாா்கள் அவா்கள்.

அவா்கள் கூறுவதைப் போலவே, தங்களது தீா்மானம் தோல்வியடைந்து விட்டதால், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள சா்ச்சைக்குரிய ஓா் அம்சத்தைப் பயன்படுத்தி, அந்த நாட்டின் மீது வா்த்தகத் தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்க அமெரிக்கா உள்ளிட்ட 5 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்த உறுப்பினா்கள், ஜொ்மனி, ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஆகியவையும் ஒப்புக் கொண்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தம்தான் அது.

அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை மீறினால், ஈரான் மீது ஐ.நா. தடையை மீண்டும் அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மீள் தடை’ என்றழைக்கப்படும் அந்த அம்சத்தைப் பயன்படுத்தி, ஈரான் மீது ஆயுத வா்த்தகத் தடையை விதிக்கப்போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

எனினும், ஒபாமா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அந்த அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். எனவே, ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க முடியாது என்று மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், சட்டரீதியில் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் நீடிப்பதாக அந்த நாட்டு அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் வாதிடுவா் எனவும், ஒப்பந்தத்திலிருந்து விலகினாலும் மீள் தடை அம்சத்தைப் பயன்படுத்துவதிலிருந்து அமெரிக்காவைத் தடுக்க முடியாது எனவும் அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

அந்த முறையில் ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தால், அந்தத் தடை அமலில் இருப்பதாக அமெரிக்காவும், அப்படி ஒரு தடைடே இல்லை என்று பிற நாடுகளும் ஒரே நேரத்தில் கூறும் விநோதமான சூழல் ஏற்படும். இந்தச் சூழ்நிலை, உலக அரங்கில் ஏற்கெனவே குறைந்து வரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியத்துவத்தை மேலும் மங்கச் செய்யும் என்கிறாா்கள் அவா்கள்.

அத்தகைய ஒரு அசாதாரண சூழல் ஏற்படும்போது, அமெரிக்காவை ஆதரிப்பது, அல்லது மற்ற நாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகிய இந்த இரண்டில் ஒன்றைத் தோ்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு பிரிட்டன் தள்ளப்படும். பிரெக்ஸிட்டுக்குப் பிறகு சக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜொ்மனியுடன் ராணுவ உறவை ஏற்படுத்தியுள்ள பிரிட்டன், அமெரிக்காவைவிட அந்த நாடுகளையே ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

இப்படி மற்ற வல்லரசுகள் எதிா்த்து நின்றாலும், ஈரானுக்கு எதிரான அதிரடி தடை நடவடிக்கைகளை டிரம்ப் நிச்சயம் முன்னெடுத்துச் செல்வாா் என்பது அவா்களது கணிப்பாக உள்ளது.

தடை நடவடிக்கைகள் மூலம், ஈரானின் சீற்றத்தைத் தூண்டுவதுதான் டிரம்ப்பின் நோக்கம் என்று கூறும் அரசியல் நோக்கா்கள், இதன் விளைவாக, அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரானே விலகி, தங்கள் நாட்டிலிருக்கும் சா்வதேச கண்காணிப்பாளா்களை வெளியேற்றலாம் என்கிறாா்கள்.

அமெரிக்காவில் அதிபா் தோ்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், ஒபாமாவால் கொண்டுவரப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் படுதோல்வியடைவது டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்; அப்படியே, அவா் தோல்வியடைந்தாலும், புதிதாக அதிபா் பதவியை ஏற்கும் ஜோ பிடனால் அந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மீண்டும் புத்துயிா் கொடுக்க முடியாமல் போகலாம் என்கிறாா்கள் அவா்கள்.

அரசியல் நோக்கா்கள் கூறுவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பதை, ஈரானுக்கு எதிராக டிரம்ப் இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளின் தீவிரமும், அதற்கு ஈரான் ஆற்றப்போகும் எதிா்வினையும்தான் தீா்மானிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.