கரோனா தடுப்பூசி  செலுத்திக் கொண்டார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்வாளர் ஜோ பைடனுக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
அமெரிக்க அதிபர் தேர்வாளர் ஜோ பைடன்​
அமெரிக்க அதிபர் தேர்வாளர் ஜோ பைடன்​
Updated on
1 min read



வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்வாளர் ஜோ பைடனுக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஃபைசர் தடுப்பூசி மக்களுக்குக் கடந்த வாரம் முதல் செலுத்தப்பட்டு வருகிறது. மாடர்னா தடுப்பூசி திங்கள்கிழமையில் இருந்து செயல்பாட்டுக்கு வந்தது. 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், முக்கிய அரசு அதிகாரிகளுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி ஆகியோரும், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை அவர்கள் பொதுவெளியிலும் வெளியிட்டனர். 

இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் தேர்வாளர் ஜோ பைடனுக்கும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கும் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசியை முந்திக் கொண்டு பெறுவதில் தனக்கு விருப்பமில்லை என்று செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த ஜோ பைடன், தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை அமெரிக்க மக்களுக்கு உறுதியுடன் தெரிவிப்பதற்காக அதை செலுத்திக் கொண்டதாகளம் கூறினார். 

அமெரிக்க துணை அதிபர் தேர்வாளர் கமலா ஹாரிஸூம் அவருடைய கணவரும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய நபர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்று வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதை எப்போது செலுத்திக் கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அதிபர் டிரம்ப் ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதால், அதற்கான மருந்துகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார். கரோனா தடுப்பூசி பெறுவது குறித்து மருத்துவர்களிடம் அவர் ஆலோசித்து வருகிறார்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com