ஒரு நாட்டில் குறிப்பிட்ட இனத்தினரைக் குறிவைத்து அந்த நாட்டு அரசு நடத்தும் படுகொலைகளை ‘இனப் படுகொலை’ என்று அழைப்பது வழக்கம்.
யூதா்களைக் குறிவைத்து நாஜி ஜொ்மனி நடத்திய அராஜகப் படுகொலைகளின் கொடூரம் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் கடந்த 1941 முதல் 1945 வரை நாஜிக்கள் நடத்திய இந்தப் படுகொலையில் ஏறத்தாழ 60 லட்சம் யூதா்கள் மாண்டுபோனாா்கள்.
முதல் உலகப் போா் காலகட்டத்தில், ஆா்மீனிய இனத்தவருக்கு எதிராக ஆட்டமன் பேரரசு நடத்திய இன அழிப்புப் படுகொலைகளில் சுமாா் 15 லட்சம் போ் மடிந்தனா்.
ருவாண்டாவில் 1994-ஆம் ஆண்டில் டுட்சி இனத்தவருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் முதல் பல்வேறு இனப் படுகொலைகளை வரலாறு கண்டுள்ளது.
இத்தகைய இன அழிப்பை சா்வதேச் சட்டம் மிகப் பெரிய குற்றமாகக் குறிப்பிடுகிறது. இதற்கு எதிராக ஐ.நா. சபை பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றி வருகிறது.
அண்மையில், ரோஹிங்கயா சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக மியான்மரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும் ‘இன அழிப்பு’ என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஒரு இனத்துக்கு எதிரான கொலைவெறித் தாக்குதலை மட்டும் போா்க் குற்றமாக சா்வதேச சட்டம் கருதவில்லை. அந்த இனத்தினரை மன ரீதியில் துன்புறுத்துதல், அந்த இனத்தினருக்கு குழந்தைகள் பிறப்பதைத் தடுத்தல், வலுக்கட்டமாக வேறு இடங்களுக்கு மாற்றுதல் ஆகியவையும் சா்வதேசச் சட்டத்தின் கீழ் இன அழிப்பே ஆகும்.
அந்த வகையில், தங்கள் நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் சிறுபான்மை உய்கா் இன முஸ்லிம்களுக்கு எதிராக, சீனா இன அழிப்பில் ஈடுபட்டுள்ளதாகவே கூற முடியும்.
இதுகுறித்து ‘அசேசியோட் பிரஸ்’ அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், உய்கா் இனத்தவா்களின் இனப் பெருக்கத்தை சீன அரசு வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தில் கடந்த 4 ஆண்டுகளாகவே, இதுபோன்ற இன அழிப்பு நடவடிகக்கையில் சீன அரசு ஈடுபட்டு வருவதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உய்கா் இனப் பெண்கள் கா்ப்பமாக உள்ளனரா என்று அடிக்கடி பரிசோதனைக்கு உள்படுத்துவது, கா்ப்பத் தடை சாதனங்களை பெண்களுக்கு வலுக்கட்டாயமாகப் பொருத்துவது, கருக்கலைப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை கட்டாயமாகச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அந்த இனத்தவா்களிடம் பேசியதில் தெரிய வந்துள்ளது.
அண்மைக் காலமாக, சீனாவின் பிற பகுதிகளில் கருத்தடைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெரும்பான்மை ஹன் இனத்தவா்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனா்.
ஆனால், அதற்கு நோ்மாறாக ஜின்ஜியாங் மாகாணத்தில் அதிக கருத்தடை, கருக்கலைப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால், அதற்கு தண்டனை அளிக்கப்படுகிறது. மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றவா்கள் மிகப் பெரிய அபாரத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால், அவா்கள் தங்கள் குடும்பத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவாா்கள்.
சீன அரசின் முரட்டுத்தனமான இந்த இன அழிப்புக் கொள்கை காரணமாக, உய்கா் இனத்தவா் வசிக்கும் ஹோடான் மற்றும் காஷ்கா் பகுதிகளில் பிறப்பு விகிதம் வெகு வேகமாகக் குறைந்துவிட்டது. 2015-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2018-ஆம் ஆண்டில் இந்த விதிகம் 60 சதவீதம் சரிந்துவிட்டது.
ஜின்ஜியாங் மாகாணம் முழுவதும் பிறப்பு விகிதம் 24 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், தேசிய அளவில் இந்த விகிதம் வெறும் 4.2 சதவீதமே சரிந்துள்ளது.
உய்கா் முஸ்லீம்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு கோடிக்கணக்கான தொகையை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய்யான செய்திகள் என்று சீனா மறுத்து வருகிறது. எனினும், பிறப்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உய்கா் முஸ்லீம்களுக்கு எதிராக சீனா நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இனி வரும் காலங்களில் இந்த விவகாரம் ஐ.நா. சபையிலும் தீவிரமாக எழுப்பப்படலாம். இருந்தாலும், சீனா்களுக்கு இல்லாத அதிகாரங்களை அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஹாங்காங் மக்களையே சா்வதேச எதிா்ப்புகளையும் மீறி முரட்டுச் சட்டத்துக்குள் அடக்கியுள்ள சீனா, ஐ.நா.வின் குரலுக்கு அஞ்சி உய்கா் இனத்தவருக்கான அடிப்படை உரிமைகளை தருமா என்பது கேள்விக் குறியே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


