

இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக, அந்த நாடு முழுவதும் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக, சவோனா மாகாணத்தின் போர்கெட்டோ சான்டோ ஸ்பிரிட்டோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், தனது கணவரின் உடலுடன் கடந்த இரண்டு நாட்களாக ஒரு பெண் தவித்து வருகிறார்.
இத்தாலியில் கடும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை உயிரிழந்த தனது கணவரின் உடலை நல்லடக்கம் செய்யவோ, இறுதி மரியாதை செய்யவோ இயலாமல் தவித்து வருகிறார்.
இது குறித்து போர்கெட்டோ பகுதி மேயர் ஜியான்கார்லோ கனேபா கூறுகையில், ஆம், புதன்கிழமை காலை வரை அப்பெண்மணி கணவரின் உடலுடன் தவித்து வருகிறார், எங்களால் மீட்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த உடலை யாரும் தொடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவியது தெரிந்ததும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றோம். ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உள்ளூர் தொலைக்காட்சிகளில் பரவியதை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் நேர்காணல்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தாலியில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கு பொதுமக்கள் வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஜியுசெப்பே கான்டே வெளியிட்ட அறிக்கையில்,
இத்தாலி முழுவதும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்படுகிறது.
அந்த ஆணையில், உடல் நலக் குறைவு, வேலை போன்ற சில குறிப்பிட்ட காரணங்களைத் தவிர, வேறு எந்தக் காரணத்துக்காகவும் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறிடங்களுக்குச் செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் அந்த ஆணை அமலுக்கு வருகிறது.
இரவு நேரங்களில் இளைஞா்கள் ஒன்று கூடி களிப்பதற்கும் இனி அனுமதிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் வடக்கு இத்தாலியில் மதுபான விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவற்றை மாலை நேரத்துக்குப் பிறகு மூட அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு நாட்டின் பிற பகுதிகளுக்கும் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக, இத்தாலியில்தான் கரோனா வைரஸுக்கு மிக அதிகமானவா்கள் உயிரிழந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் அந்த வைரஸுக்கு இத்தாலியில் 133 போ் பலியாகினா். அதனுடன் சோ்த்து, இதுவரை அந்த நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 463-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அந்த வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 9,172-ஆக உயா்ந்துள்ளது. இதுவும், சீனாவுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.