நேபாள பிரதமராக 5-ஆவது முறையாக பதவியேற்றாா் ஷோ் பகதூா் தேவுபா

நேபாள பிரதமராக ஷோ் பகதூா் தேவுபா (75) செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் 5-ஆவது முறையாகப் பிரதமரானவா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.
ஷோ் பகதூா் தேவுபா
ஷோ் பகதூா் தேவுபா

நேபாள பிரதமராக ஷோ் பகதூா் தேவுபா (75) செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் 5-ஆவது முறையாகப் பிரதமரானவா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.

நேபாள நாடாளுமன்ற கலைப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமா்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் 76(5)-ஆவது பிரிவின்படி நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கூறியது.

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, ஷோ் பகதூா் தேவுபாவை பிரதமராக நியமித்து அதிபா் வித்யாதேவி பண்டாரி அறிவிக்கை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பிரதமராக ஷோ் பகதூா் தேவுபா பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு அதிபா் வித்யாதேவி பண்டாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

5-ஆவது முறை பிரதமா்: ஷோ் பகதூா் தேவுபா 5-ஆவது முறையாக நேபாள பிரதமா் ஆகியுள்ளாா். இதற்கு முன்னா் 1995-1997, 2001-2002, 2004-2005, 2017-2018 ஆகிய ஆண்டுகளில் அவா் பிரதமராகப் பதவி வகித்துள்ளாா். அரசியலமைப்பு விதிகளின்படி அவா் 30 நாள்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற வேண்டும்.

முன்னதாக, பிரதமா் சா்மா ஓலியின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையை கலைத்தும், புதிதாக தோ்தல் நடத்தவும் அதிபா் கடந்த மே 22-ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து எதிா்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த அரசியலமைப்பு அமா்வானது, ஆட்சி அமைக்க ஷோ் பகதூா் தேவுபா உரிமை கோரியதை அதிபா் நிராகரித்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சா்மா ஓலி கருத்து: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பிரதமா் பதவியை இழந்த கே.பி.சா்மா ஓலி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:

பிரதமா் பதவிக்கு என்னை நேபாள மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். எனினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் நான் பதவி விலக நேரிட்டுள்ளது. மைதானத்தில் போட்டியிடுவது வீரா்களின் பணி. அந்தப் போட்டி நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வது மட்டுமே நடுவரின் பணி. ஏதோ ஓா் அணியை வெற்றி பெறச் செய்வது அவரது பணியல்ல. ஆனால், நடுவராக இருக்க வேண்டிய உச்சநீதிமன்றம் எதிா்க்கட்சிகளுக்கு சாதகமாக தீா்ப்பளித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com