இனவெறிக்கு  எதிரான பிரசாரத்தை மேற்கொள்ள டி காக் மறுப்பு; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நடந்தது என்ன?

 உலகம் முழுவதும் கால்பந்து, பார்முலா ஒன் என பல விளையாட்டுகளிலும் இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை விளையாட்டு வீரர்கள் இப்படி முட்டி போட்டுப் பதிவு செய்து வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்தாண்டு, அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை காவல்துறையினர் படுகொலை செய்தனர். காவல்துறையினர் அவரின் கழுத்தில் காலை வைத்து மிதிக்க பிளாய்டு துடிதுடித்து இறந்து போனார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு கறுப்பின மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக பிளாக் லைவ்ஸ் மேட்டர்  என்ற இயக்கும் தீவிர பரப்பரை மேற்கொண்டது.

அதன்படி, விளையாட்டு வீரர்கள் இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாகப் போட்டி தொடங்கும் முன் முட்டி போடுவார்கள். இது "டேக்கிங் ஏ க்னி" என்று அழைக்கப்படுகிறது.

 உலகம் முழுவதும் கால்பந்து, பார்முலா ஒன் என பல விளையாட்டுகளிலும் இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை விளையாட்டு வீரர்கள் இப்படி முட்டி போட்டுப் பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும், சில வெள்ளை இன வீரர்கள் இப்படி முட்டி போட மறுத்தும் உள்ளனர். ஐசிசியின் பரிந்துரையின் பெயரில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி 20 தொடரிலும் அனைத்து அணி வீரர்களும் முட்டி போட்டு இனவெறிக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த சில வீரர்கள் முட்டி போட மறுத்துள்ளனர். 

இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அனைத்து வீரர்களும் இனவெறிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் வகையில் முட்டி போட வேண்டும் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான டி காக் மண்டியிட மறுத்துள்ளார். அணியின் நிர்வாகம் உத்தரவிட்டும் கூட, அவர் இந்த பரப்புரைக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் அவர் நேற்று மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறவில்லை. முதலில்  தனிப்பட்ட காரணங்களால் அவர் போட்டியில் விளையாடவில்லை என கூறப்பட்டது. அதன் பின்னரே இனவெறிக்கு எதிரான பரப்புரை தொடர்பாகவே அவர் அணியில் இடம் பெறவில்லை எனத் தெரிய வந்தது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிகாக் ஒன்றும் குழந்தை இல்லை. அவருக்கு எனத் தனி கொள்கை மற்றும் விருப்பங்கள் உள்ளது. அவருடைய முடிவையும் நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம். டிகாக் இன்னும் தென்னாப்பிரிக்க வீரர் தான். அவர் இன்னும் எங்களில் ஒருவர் தான். எனவே அவருக்குத் தேவையான ஆதரவை நாங்கள் எப்போதும் தருவோம்.

நாங்கள் போட்டிக்காகத் துபாய்க்கு சென்று கொண்டிருந்த போது தான் எங்கள் நிர்வாகத்தின் உத்தரவு எங்களுக்குக் கிடைத்தது. அப்போது தான் டி காக் தனது முடிவை எடுத்தார் என்று நினைக்கிறேன். டிரஸிங் ரூமில் தான் அவர் தனது முடிவைக் குறிப்பிட்டார். போட்டி தொடங்கி சற்று நேரத்தில்  இது போன்ற உத்தரவுகளைப் பெறுவது சரியானது இல்லை என்றே நான் நினைக்கிறேன். அதேநேரம் இதுபோன்ற உத்தரவுகள் எப்போது வந்தாலும் நிலைமையைச் சமாளித்தாக வேண்டும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் டி காக்கின் இந்த முடிவு எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரர். அவர் கடைசி நேரத்தில் போட்டியில் இல்லை என்பது எதிர்பார்க்காத ஒன்று. இந்த நிலை எத்தனை காலம் தொடரும் என எனக்குத் தெரியாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com