அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற மீதமுள்ள 12 நாள்கள்: என்ன செய்ய போகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தேர்தலை முன்கூட்டியே அறிவித்திருந்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் மிக பிரபலமான வெளிநாட்டு அரசியல் தலைவர்களில் ஒருவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரின் அரசியல் வாழ்க்கை என்னவாகும் என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேர்தல். வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தால் மக்கள் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் அதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் எரின் ஓ டூலுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருப்பதாக எண்ணிய ட்ரூடோ, தேர்தலை மூன்கூட்டியே நடத்த திட்டமிட்டு செப்டம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவித்தார்.

ஆனால், அவரின் மக்கள் ஆதரவு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் வெகுவாக குறைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், ட்ரூடோ பெரும்பான்மை இல்லாத அரசை அமைக்கவோ அல்லது படு தோல்வி அடையவோ வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நானோஸ் ஆராய்ச்சி குழுவில் கருத்துக்கணிப்பு நடத்தும் நிக் நானோஸ் கூறுகையில், "பெருந்தொற்று சிறப்பாக கையாண்டதாகவும் தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதாகவும் பொருளாதாரம் மீண்டெழுந்துவருவதாகவும் எண்ணி லிபரல் கட்சி தேர்தலை அறிவித்தது" என்றார்.

ட்ரூடோவுக்கு எதிரான மக்களின் மனநிலைக்கு அரசியல் வல்லுநர்கள் பல காரணங்களை தெரிவிக்கின்றனர். சுகாதார பேரிடரை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற ட்ரூடோ முயற்சிப்பதாக மக்கள் கருதுகின்றனர் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போது தேர்தலை நடத்தக் கூடாது என 60 சதவிகிதத்தினர் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். அதேபோல், ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்துவதை கனடா மக்கள் விரும்பவில்லை.

தனக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்கிற தெளிவான காரணத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் ட்ரூடோ சிரமப்பட்டுவருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதற்கு நேரெதிர்மாறாக, பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தும் பாரம்பரியமான கொள்கைகளை முன்னிறுத்தியும்  எரின் ஓ டூல் பரப்புரை செய்துவருகிறார். எனவே, இது லிபரல் கட்சிக்கு எதிராகவே மக்களின் மனநிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com