போராட்டக் களத்தில் இறங்கிய பெண்கள்; துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்

உயர் நிலை பள்ளிகளில் படிக்க சிறுமிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி கிழக்கு காபூலில் உள்ள உயர் நிலை பள்ளிக்கு வெளியே பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிறுமிகளின் உரிமைகளை நிலைநாட்டக் கோரி பெண்கள் செவ்வாய்கிழமை நடத்திய போராட்டத்தை தலிபான்கள் வன்முறையை கொண்டு அடக்கியுள்ளனர். வானை நோக்கி சுட்டதையும் போராட்டக்காரர்களை பின்னுக்கு தள்ளியதையும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக, வகுப்புகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் தலிபான்கள் தடை விதித்தனர். இதையடுத்து, உயர் நிலை பள்ளிகளில் படிக்க சிறுமிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி கிழக்கு காபூலில் உள்ள உயர் நிலை பள்ளிக்கு வெளியே பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பெண்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். "எங்களுடைய பேனாக்களை உடைக்காதீர்கள். எங்களின் புத்தகங்களை எரிக்காதீர்கள். எங்களின் பள்ளிகளை மூடாதீர்கள்" என எழுதப்பட்டிருந்த பதாகைகளை தலிபான்கள் பறித்தனர். போராட்டத்தை முன்னெடுத்து செல்ல பெண்கள் முற்பட்டபோது தலிபான்கள் அவர்களை பின்னுக்கு தள்ளினர். இதை விடியோ எடுக்க முயன்ற வெளிநாட்டு பத்திரிகையாளருக்கு குண்டு அடிப்பட்டது.

இதற்கிடையே, தலிபான் பயங்கரவாதி ஒருவர், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். ஆப்கானிய பெண் ஆர்வலர்களின் தன்னிச்சையான இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. துப்பாக்குச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளிக்குள்ளே அடைக்கலம் புகுந்தனர்.

இதுகுறித்து காபூல் சிறப்பு படையின் தலைவரும் தலிபான் பயங்கரவாதியுமான மவ்லவி நஸ்ரல்லா கூறுகையில், "போராட்டத்தில் பாதுகாப்பு அலுவலர்களுடன் அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மற்ற எல்லா நாடுகளையும் போல நம் நாட்டிலும் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர்கள் முன்பு பாதுகாப்பு அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com