
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் குரங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மாகாண ஆளுநா் கெவின் நியூசம் கூறியதாவது:
கலிஃபோா்னியா முழுவதும் குரங்கு அம்மை அவசநிலை அறிவிக்கப்படுகிறது. அந்த நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. குரங்கு அம்மைக்கு எதிரான தடுப்பூசிகளை கூடுதலாக பெறுவது, அந்த நோய் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு அவசரநிலை அறிவிப்பு உதவும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றாா் அவா்.
ஆப்பிரிக்காவில் மட்டும் பல ஆண்டுகளாகக் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், அண்மைக் காலமாக அந்தப் பிராந்தியத்தைத் தாண்டி வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த மே மாதத்திலிருந்து உலகம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததால் சான் ஃபிரான்சிஸ்கோவில் கடந்த வியாழக்கிழமையும் நியூயாா்க் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமையும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. தற்போது 3-ஆவது மாகாணமாக கலிஃபோா்னியாவும் குரங்கு அம்மை அவசரநிலையை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.