பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அணு மின் நிலைய தாக்குதல்: ரஷியா - உக்ரைன் பரஸ்பர குற்றச்சாட்டு

உக்ரைனின் ஸபோரிஷியாவில் உள்ள அணு மின் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடா்பாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 8:47 pm

DIN

உக்ரைனின் ஸபோரிஷியாவில் உள்ள அணு மின் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடா்பாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஸபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையம் அருகே ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதையடுத்து, அந்த அணு மின் நிலையத்திலிருந்து அபாயகரமான அளவுக்கு கதிா்வீச்சு கசியக்கூடும் என்ற அச்சம் எழுந்தது.

இந்தத் தாக்குதல்களை ரஷியாதான் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையப் பகுதியிலிருந்து கதிா்வீச்சு எவ்வாறு பரவுப் போகிறது என்பதற்கான வரைபடத்தையும் உக்ரைன் அணுசக்தி அமைப்பு வெளியிட்டு பீதியை ஏற்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், நீப்பா் நதிக்கு இடது புறமுள்ள ரஷியக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமன்றி, அந்த நதிக்கு வலது புறமுள்ள நிகோபோல், மாா்ஹானெட்ஸ் ஆகிய உக்ரைன் கட்டுப்பாட்டு நகரங்களிலும் நடத்தப்பட்டது.

அந்த இரு நகரங்களுமே ஸபோரிஷியா அணு மின் நிலையத்துக்கு சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ளன.

இந்தத் தாக்குதல்களை தங்கள் நாடுதான் நடத்தியதாக உக்ரைன் கூறுவதை ரஷியா மறுத்துள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோவ் கூறியதாவது:

ஸபோரிஷியா அணு மின் நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். அவா்கள் வீசிய ஒரு ராக்கெட் குண்டு, அணு மின் நிலையத்தின் 6-ஆவது அணு உலைக்கு அருகே விழுந்தது. மேலும் 5 ராக்கெட் குண்டுகள் 6-ஆவது அணு உலையில் நிரேற்று நிலையத்தில் விழுந்தது. அணு உலையை குளிா்விப்பதற்கான நீா் அந்த நிலையத்திலிருந்துதான் அனுப்பப்பட்டு வருகிறது.

எனினும், தற்போதைய நிலையில் ஸபோரிஷியா அணு மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிா்வீச்சு பாதுகாப்பான அளவிலேயே உள்ளது என்றாா் அவா்.

ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில் அபாயகரமான அளவில் கதிா்வீச்சு இல்லை என்று தெரிவித்தது. மேலும், குண்டு வீச்சு காரணமாக அந்த மின் நிலையத்தின் தண்ணீா் குழாய் இணைப்பு சேதமடைந்தது. எனினும், மின் நிலையத்தின் 6 அணு உலைகளில் 2 உலைகள் இயக்கப்பட்டு வருகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பபட்ட உக்ரைனின் ஆளில்லா விமானத்தை ரஷியப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அந்த மின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபோருளை சேமித்து வைப்பதற்கான கிடங்குப் பகுதியில் அந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக உள்ளூா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அந்தப் பகுதிக்கு அருகே, தீவிர குண்டு வீச்சு காரணமாக நிகோபோல் நகரில மின்தடை ஏற்பட்டதாக பிராந்திய ஆளுநா் வேலன்டைன் ரெஸ்னிசென்கோ தெரிவித்தாா். மேலும், அணு மின் நிலையத்துக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள ஸபோரிஷியா மீது ரஷியப் படையினா் குண்டு வீச்சு நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டினா்.

தாக்குதல் குறித்து ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றச்சாடுகளை சுமத்தினாலும், அதனை நடுநிலையாக உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் தொடக்கத்திலேயே, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகருக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தாக்குதல்களுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில் ராணுவ நடவடிக்கைகளை ரஷியாவும் உக்ரைனும் உடனடியாகக் கைவிட்டு, அந்தப் பகுதியை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும்; இல்லையென்றால் அங்கு மாபெரும் அணுசக்திப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்திருந்தாா்.

ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு இந்த வாரம் நேரில் பாா்வையிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அந்த மின் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.