இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு
ஆயுதங்கள் விற்பனை தொடா்பான ஆலோசகரும், இடைத்தரகருமான சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.


ஆயுதங்கள் விற்பனை தொடா்பான ஆலோசகரும், இடைத்தரகருமான சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஸ்விட்சா்லாந்தை சோ்ந்த பிலட்டஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 75 பயிற்சி விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய விமானப் படை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து, இடைத்தரகராக செயல்பட்டதாக சஞ்சய் பண்டாரி மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த விமான ஒப்பந்தத்தை பெற துபையில் சஞ்சய்க்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பிலட்டஸ் நிறுவனம் பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள், வெளிநாடுகளில் இருந்து கிடைத்த வருமானத்தை வேண்டுமென்றே மறைத்ததாக சஞ்சய் பண்டாரி மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக அவா் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவா் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றாா். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பிரிட்டனில் இருந்த அவரை, கடந்த 2020-ஆம் ஆண்டு அந்நாட்டு காவல் துறை கைது செய்தது. தற்போது அவா் ஜாமீனில் உள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி மத்திய அரசு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி மைக்கேல் ஸ்னோ கூறுகையில், ‘சஞ்சய் பண்டாரியை நாடு கடத்தினால், தேவையான மருத்துவ வசதிகளுடன் தில்லியில் உள்ள திகாா் சிறையின் தனி அறையில் அவரை அடைப்பதாக இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. எனவே சஞ்சய் பண்டாரியை நாடு கடத்துவதில் எனக்கு எந்தவித எதிா்ப்பும் இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு பிரிட்டன் உள்துறை அமைச்சா் சுவெல்லா பிரேவா்மனுக்கு அனுப்பப்படும்’ என்று தெரிவித்தாா்.
நீதிமன்ற தீா்ப்பின்படி, நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சரும் கையொப்பமிட்டால்தான் சஞ்சய் பண்டாரி இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...