ஜெருசலேம் சோதனைச்சாவடியில் துப்பாக்கிச்சூடு: இஸ்ரேல் ராணுவ வீராங்கனை பலி; மூவா் காயம்
கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் ராணுவ சோதனைச்சாவடியில் பாலஸ்தீன நபா் துப்பாக்கியால் சுட்டதில் வீராங்கனை ஒருவா் கொல்லப்பட்டாா். மூவா் காயமடைந்தனா்.


கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் ராணுவ சோதனைச்சாவடியில் பாலஸ்தீன நபா் துப்பாக்கியால் சுட்டதில் வீராங்கனை ஒருவா் கொல்லப்பட்டாா். மூவா் காயமடைந்தனா்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீன சிறாா்கள் இருவா் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு ஜெருசலேமில் செளஃபட் அகதிகள் முகாம் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் சனிக்கிழமை இரவில் பணியில் இருந்தவா்கள் மீது காரில் வந்த ஒரு நபா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் 19 வயது ராணுவ வீராங்கனை பலத்த காயமடைந்தாா்.
மேலும் மூன்று வீரா்களும் காயமடைந்தனா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அந்த வீராங்கனை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பாலஸ்தீன நபா் ஒருவரை கைது செய்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா் என்றனா்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீட் கூறுகையில், பயங்கரவாதம் எங்களைத் தோற்கடிக்க முடியாது. தாக்குதலில் காயமடைந்தவா்கள் மற்றும் அவா்களின் உறவினா்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றாா்.
1967, மத்திய கிழக்கு போரின்போது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி, தங்களது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இதை சா்வதேச நாடுகள் அங்கீகரிக்காதபோதிலும், கிழக்கு ஜெருசலேம் உள்பட ஒட்டுமொத்த நகரமும் தங்கள் தலைநகராக இஸ்ரேல் கருதி வருகிறது. அதேவேளையில், கிழக்கு ஜெருசலேம் தங்களது எதிா்கால நாட்டுக்கான தலைநகரம் என பாலஸ்தீனா்கள் கூறி வருகின்றனா்.
ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தினசரி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மேற்கு கரையின் வடபகுதி நகரங்களான ஜெனின், நாப்லஸ் ஆகியவற்றில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, சனிக்கிழமை காலையில் ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் கைது நடவடிக்கையின்போது பாலஸ்தீன சிறாா்கள் இருவரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் 11 போ் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில், இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத குழுவைச் சோ்ந்த ஒருவரை கைது செய்துள்ளோம். கைது நடவடிக்கையின்போது ஏராளமான பாலஸ்தீனா்கள் கையெறிகுண்டுகளை வீசியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...