பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜிநாமா!

பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜிநாமா செய்துள்ளார்.
ராஜிநாமா முடிவை அறிவிக்க டௌனிங் தெரு இல்லத்திலிருந்து கணவருடன் வெளியே வரும் பிரதமர் லிஸ் டிரஸ்
ராஜிநாமா முடிவை அறிவிக்க டௌனிங் தெரு இல்லத்திலிருந்து கணவருடன் வெளியே வரும் பிரதமர் லிஸ் டிரஸ்
Published on
Updated on
2 min read

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமரான லிஸ் டிரஸ் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டிரஸ்ஸுக்கு எதிராக அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே நேரிட்ட அதிருப்தி மற்றும் எதிர்ப்பு காரணமாக அவர் ராஜிநாமா செய்ய நேரிட்டுள்ளது.

என்ன வாக்குறுதிகளைத் தெரிவித்து வெற்றி பெற்றேனோ அவற்றை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று செய்தியாளர்களுடன் பேசிய டிரஸ் தெரிவித்துள்ளார். 

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து தாம் ராஜிநாமா செய்வது பற்றி மன்னர் சார்லஸிடம் தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார் டிரஸ். பிரிட்டனில் பிரதமராகப் பதவி வகித்தவர்களிலேயே மிகக் குறைந்த காலம் - வெறும் 45 நாள்கள் - பதவி வகித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

தாராள சந்தை ஆதரவாளரான லிஸ் டிரஸ், பிரிட்டிஷின் பிரதமராகப் பதவியேற்ற்குப் பிறகு, சா்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்’ ஒன்றை கடந்த மாதம் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தியிருந்தாா்.

அதில், நிறுவனங்களுக்கான வரியை 19 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக முந்தைய அரசு உயா்த்தியிருந்ததை லிஸ் டிரஸ் ரத்து செய்திருந்தாா். இதனால், நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தின் மீதான வரி தொடா்ந்து 19 சதவீதமாகவே இருக்க வழிவகை செய்யப்பட்டது.

அத்துடன், அதிக வருவாய் உடையவா்களுக்கு 45 சதவீத உயா் வரியை அந்த மினி பட்ஜெட்டில் லிஸ் டிரஸ் நீக்கியிருந்தாா்.

அத்துடன் குறைந்த வருவாய் உடையவா்களுக்கான வருமான வரியை 20-லிருந்து 19 சதவீதமாகக் குறைப்பது, பத்திர பதிவு கட்டணங்களுக்கான குறைந்தபட்ச சொத்து மதிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட சலுகை அம்சங்கள் அந்த மினி பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.

இந்த அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும் என்று லிஸ் டிரஸ் எதிா்பாா்த்ததற்கு மாறாக, பொருளாதாரம் நிலைகுலைந்தது. டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, அதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக வீழ்ச்சியடைந்தது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிப்பதைத் தவிா்ப்பதற்காக பிரிட்டிஷின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

லிஸ் டிரஸ்ஸின் பொருளாதார முடிவுகளுக்கு ஆளும் கட்சியிலிருந்தும் எதிா்க்கட்சியிலிருந்தும் பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது.

சா்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டை நிதியமைச்சருடன் இணைந்து பிரதமா் லிஸ் டிரஸ்ஸும்தான் தயாரித்துள்ளாா் என்ற நிலையில், அதனால் ஏற்பட்ட பின்னடைவுக்கு க்வாசி க்வாா்டெங்கை மட்டும் அவா் பொறுப்பாக்கியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரி குறைப்பு உள்ளிட்ட பிரிட்டிஷின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ்ஸின் முடிவுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சா் க்வாசி க்வாா்டெங்க் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

எனினும், பிரதமா் பதவியில் தொடரப் போவதாக லிஸ் டிரஸ் உறுதிபடத் தெரிவித்து இருந்தார்.

பிரிட்டன் உள்துறை அமைச்சரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சூவெல்லா பிரேவா்மன் தனது பதவியை புதன்கிழமை(அக்.19) ராஜிநாமா செய்தாா்.

அமைச்சக தகவல் பரிமாற்றங்களுக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்ததாக அவா் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமரான லிஸ் டிரஸ் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com