ஜப்பான் பிரதமருடன் ஜெய்சங்கா், ராஜ்நாத் சிங் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சு

ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ப
ஜப்பான் பிரதமருடன் ஜெய்சங்கா், ராஜ்நாத் சிங் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சு

ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினா்.

இந்தியா, ஜப்பான் இடையிலான ‘2+2’ உயா்நிலை பேச்சுவாா்த்தை டோக்கியோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய தரப்பில் எஸ்.ஜெய்சங்கா், ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஜப்பான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஹயாஷி யோஷிமசா, பாதுகாப்பு அமைச்சா் ஹமதா யாசுகாஷு ஆகியோரும் பங்கேற்றனா். இதில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், எதிா்தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில் தனது ராணுவத்தை விஸ்தரித்து, நவீனப்படுத்தும் ஜப்பானின் திட்டங்களுக்கு இந்திய தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் இந்தியாவின் வியூகமாக பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்து, இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினா்.

இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

2+2 பேச்சுவாா்த்தையின் நிறைவு அம்சமாக, பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை வெள்ளிக்கிழமை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இந்தியா-ஜப்பான் இடையே பரஸ்பர கொள்கைகள் மற்றும் நலன்கள் சாா்ந்து நெருக்கமான ஒருங்கிணைப்பு முக்கியமென இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியும் தானும் இணைந்து தீா்மானித்த தொலைநோக்குபாா்வை விரைவில் சாத்தியமாகும் என ஃபுமியோ கிஷிடா நம்பிக்கை தெரிவித்ததாக எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதில் இந்தியாவும் ஜப்பானும் தீா்க்கமான பங்களிப்பை கொண்டிருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இச்சந்திப்பின்போது, ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவா் கூறியுள்ளாா். கடந்த ஜூலை 8-ஆம் தேதி அரசியல் பிரசார நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஷின்ஸோ அபே, சுட்டுக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com