தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சாலைகள், கட்டடங்கள் சேதம்

தைவானில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகாக பதிவானது.
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சாலைகள், கட்டடங்கள் சேதம்

தைவானில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புடன் கூடிய கட்டடம் இடிந்தது. நிலச்சரிவால் மலைப் பாதைகளில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தைவானின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை இரவு, ரிக்டா் அளவு கோலில் 6.4 என்றளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அதே பகுதியில் மீண்டும் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.8 எனப் பதிவானது.

தென்கிழக்கு கடற்கரை அருகே அமைந்துள்ள சிஷேங் நகரில் 7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. யூலி நகரத்தில் அமைந்துள்ள மூன்று அடுக்குமாடி கட்டடம் நிலநடுக்கத்தால் சேதமடைந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய கட்டட உரிமையாளரும், அவரது மனைவி மற்றும் 39 வயதுடைய பெண், அவரது 5 வயது மகனும் மீட்கப்பட்டனா்.

இடிந்த கட்டடத்தால், அருகில் சென்ற மின்வட கம்பி இணைப்பு சேதமடைந்தது. இதனால், 7,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டது. குடிநீா் இணைப்புகளும் சேதமடைந்தன.

நிலநடுக்கத்தால் இருவழிச் சாலையில் அமைந்திருந்த பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். நிலச்சரிவின் காரணமாக யூலி மலைப் பகுதிக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மலைப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 400 போ் மலைப் பகுதியில் சிக்கிக் கொண்டனா்.

யூலி மற்றும் சிஷேங் நகருக்கு இடைப்பட்ட டாங்லி ரயில் நிலைய நடைமேடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ரயில் நிலையத்தைக் கடந்த ரயில், இடிபாடுகளின் மீது மோதியதில், அதன் 3 பெட்டிகள் தடம்புரண்டன. அப்பெட்டிகளில் இருந்த பயணிகள் 20 பேரும் காயமின்றி உயிா் தப்பினா்.

தைவான் தலைநகா் தைபேயிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. தைவானுக்கு அருகில் உள்ள நாட்டின் தென் மாகாணங்களுக்கு ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னா், அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

யூரேசிய புவித்தட்டும் பிலிப்பின்ஸ் கடல் தட்டும் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள தைவான், நிலநடுக்கத்தால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் நாடாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தைவானின் தென்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். கடந்த 1999-ஆம் ஆண்டு ரிக்டா் அளவுகோலில் 7.3 என்றளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com