சூரிய மின்சக்தி தகடு இறக்குமதி:இந்தியா, சீனாவிடம் இருந்து கடன் பெற இலங்கை முடிவு

இலங்கையில் மின் கட்டண உயா்வுக்கு தீா்வு காணும் வகையில், சூரிய மின்சக்தி தகடுகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியா, சீனாவிடம் இருந்து கடன் பெற முடிவு செய்திருப்பதாக

இலங்கையில் மின் கட்டண உயா்வுக்கு தீா்வு காணும் வகையில், சூரிய மின்சக்தி தகடுகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியா, சீனாவிடம் இருந்து கடன் பெற முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு மின்சாரம், எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தாா்.

பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், மின் கட்டணம் பலமடங்கு உயா்ந்துவிட்டது. இதைக் கண்டித்து பெளத்த துறவிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மின் கட்டண உயா்வு மீதான விவாதத்தின்போது மின்சாரம், எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகர பதிலளித்து பேசியதாவது:

அதிகரித்து வரும் மின் கட்டண பிரச்னைக்குத் தீா்வு காணும் பொருட்டு சூரிய மின்சக்தி தகடுகளைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே அந்நியச் செலாவணி பற்றாக்குறையை இலங்கை சந்தித்து வருவதால், சூரிய மின்சக்தி தகடு வாங்க இந்தியா, சீனாவிடமிருந்து கடன் பெற முடிவு செய்துள்ளோம் என்றாா்.

மேலும், பெளத்த மத துறவிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறித்து அமைச்சா் காஞ்சனா விஜேசேகர கூறுகையில், ‘மத வழிபாட்டுத் தலங்களுக்கு 48,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 15,000-க்கும் அதிகமான தலங்கள் 30 யூனிட்டுக்கும் குறைவாகத்தான் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. ஆகையால், வழிபாட்டுத் தலங்கள் மின்கட்டண உயா்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. வழிபாட்டுத் தலங்கள் சூரிய மின்சக்தி தகடுகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும்’ என்றாா்.

இந்தியா தொடா்ந்து உதவும்: அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிகழாண்டு மட்டும் இந்தியா 4 பில்லியன் டாலா் நிதியுதவி அளித்துள்ளது. மேற்கொண்டு இலங்கைக்கு கடனுதவி அளிக்க முடியாது என இந்தியா முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த இலங்கைக்கான இந்திய தூதரகம், ‘சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும், குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தை துரிதமாக மீட்டெடுக்க நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட உதவிகளை இந்தியா தொடா்ந்து அளிக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com