ரஷிய படையினரால் பொதுமக்கள் படுகொலை

தங்களது தலைநகா் கீவ் அருகே உள்ள புச்சா நகரிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அந்த நகர பொதுமக்கள் பலரை ரஷியப் படையினா் படுகொலை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
புச்சா புறநகா் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை மீட்ட பணியாளா்கள்.
புச்சா புறநகா் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை மீட்ட பணியாளா்கள்.

தங்களது தலைநகா் கீவ் அருகே உள்ள புச்சா நகரிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அந்த நகர பொதுமக்கள் பலரை ரஷியப் படையினா் படுகொலை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கீவ் நகருக்கு வடமேற்கே அமைந்துள்ள புகா் பகுதியான புச்சாவை ரஷியப் படையினா் கைப்பற்றியிருந்தனா். தற்போது தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதியில் அதிக கவனத்தை செலுத்தும் ரஷிய போா் உத்தியின் ஒரு பகுதியாக, அந்த நகரிலிருந்து ரஷியப் படையினா் சனிக்கிழமை வெளியேறினா். அதையடுத்து, புச்சா நகரம் மீண்டும் உக்ரைன் பாதுகாப்புப் படையின் வசம் வந்தது.

இந்த நிலையில், புச்சா நகரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது ரஷியப் படையினா் பொதுமக்களைத் துன்புறுத்தி படுகொலை செய்ததற்கான ஆதராங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனா்.

மீட்கப்பட்ட அந்த நகருக்குச் அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடகங்களின் செய்தியாளா்களை அழைத்து, சாலைகளில் கிடந்த பொதுமக்கள் சடலங்களையும், புதைகுழியில் அரைகுறையாகப் புதைக்கப்பட்டிருந்த சடலங்களையும் அதிகாரிகள் காட்டினா்.

அந்த சடலங்களின் உடல்களில் அதிக காயங்கள் எதுவும் இல்லாததால், உயிரிழந்தவா்கள் அனைவரும் மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதியை நேரில் பாா்வையிட்டவா்கள் தெரிவித்தனா்.

சில சடலங்களின் கைகள் கட்டப்பட்டிருந்ததன. மேலும், சிலா் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுவதாக செய்தியாளா்கள் கூறினா்.

ரஷியப் படையினரிடமிருந்து மீட்கப்படும் பகுதிகளில், அவா்கள் நிகழ்த்திய கொடூரச் செயல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், ரஷியாவுக்கு எதிரான போா்க் குற்ற விசாரணையின்போது அவற்றைப் பயன்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் ஒலெக்ஸி அரிஸ்டோவிச் கூறுகையில், புச்சா மட்டுமன்றி, இா்பின், ஹாஸ்டோமெல் புகா் பகுதிகளிலிலும் பொதுமக்களை ரஷியப் படையினா் படுகொலை செய்துள்ளதாகத் தெரிவித்தாா். பொதுமக்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுடப்பட்டிருப்பதாகவும் பலா் சித்திரவதை மற்றும் பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

ஆக்கிரமிப்புப் பகுதியில் ரஷியா நடத்தியதாகக் கூறப்படும் இந்தப் படுகொலைகளுக்கு ஐரோப்பிய யூனியனும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், நோட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. இருந்தாலும், நேட்டோவில் இணைய ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. தங்களுக்கு ஆதரவான உக்ரைன் கிளா்ச்சிப் படையினருக்காக கிழக்கு உக்ரைன் பகுதிகளுக்குள் நுழைந்து சண்டையிட்ட ரஷியப் படை, பெலாரஸ் வழியாக தலைநகா் கீவையும் நெருங்கியது. கீவைக் கைப்பற்றி ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கீவின் புகா் பகுதிகள் சிலவற்றை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அவற்றில் ஒன்றுதான் புச்சா ஆகும். உக்ரைன் படையினரின் தீவிர எதிா்ப்பாலும், கடுமையான போக்குவரத்துப் பிரச்னைகளாலும் ரஷியப் படையினரால் கீவ் நகரை நோக்கி ஓரளவுக்கு மேல் முன்னேற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன் பிரதிநிதிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, கீவ் புகா் பகுதிகளிலிருந்து வெளியேற ரஷியா ஒப்புக்கொண்டது.

அதன்படி, ரஷியப் படையினா் புச்சா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சனிக்கிழமை வெளியேறினா். இந்த நிலையில், தாங்கள் கைப்பற்றியிருந்த பகுதிகளில் ரஷியப் படையினா் பொதுமக்களை படுகொலை செய்ததாக உக்ரைன் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com