ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம்: ஐ.நா. பொது சபையில் தீா்மானம் நிறைவேற்றம் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிப்பு

உலகின் மிக முக்கியத்துவம்வாய்ந்த மனித உரிமைகள்அமைப்பான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கப்பட்டுள்ளது. இதற்கான தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.

நியூயாா்க்: உலகின் மிக முக்கியத்துவம்வாய்ந்த மனித உரிமைகள்அமைப்பான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கப்பட்டுள்ளது. இதற்கான தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

உக்ரைனில் ரஷிய படையினா் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக புகாா் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து நடுநிலை வகித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து நீக்கப்படும் இரண்டாவது நாடு ரஷியாவாகும். முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பிலிருந்து லிபியா நீக்கப்பட்டது.

உக்ரைன் மீதான தன்னிச்சையான ராணுவ நடவடிக்கையை ரஷியா 40 நாள்களைக் கடந்து மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைன் தலைநகா் கீவ் புகா் பகுதியான புச்சா நகரிலிருந்து ரஷிய படைகள் பின்வாங்கிய பிறகு, அங்கு ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்தப் படுகொலைகளுக்கு ரஷிய படைகள்தான் காரணம் என்று உக்ரைன் குற்றம்சாட்டியது. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்தன.

புச்சா நகா் படுகொலைகளைத் தொடா்ந்து, ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 47 உறுப்பினா்கள் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்குவதற்கான தீா்மானத்தை, 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்தது. அதன் மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தீா்மானத்தை முன்மொழிந்த அமெரிக்க தூதா் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், ‘ரஷியப் படைகளை சோ்ந்தவா்கள் உக்ரைனில் போா்க் குற்றங்களைச் செய்ததாக நாங்கள் நம்புகிறோம். அதற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும்’ என்றாா்.

அதனைத் தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 93 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 24 நாடுகள் தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா உள்பட 58 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன.

தீா்மானத்துக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததையடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, வாக்கெடுப்பை புறக்கணித்தற்கான காரணம் குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது’ என்றாா்.

நிகழாண்டு ஜனவரி மாதம் முதலே, ஐ.நா. பொது சபை, பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா தொடா்ந்து நடுநிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com