சீனத்துக்கு என்னதான் பிரச்னை? 

தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களை ஹேக் செய்தவர்கள் சீனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனத்துக்கு என்னதான் பிரச்னை? 
சீனத்துக்கு என்னதான் பிரச்னை? 


தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களை ஹேக் செய்தவர்கள் சீனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அருணாசல பிரதேச எல்லையில் இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்டது.

அதாவது, ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள எல்லைக் கோட்டை மாற்றியமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. அதன்பிறகு சீன நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்கள், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை ஹேக் செய்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களை ஹேக் செய்தவர்கள் குறித்து மத்திய அரசு நடத்திய தீவிர விசாரணையில், ஹேக்கர்கள் சீனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 100 சர்வர்களில், 5 சர்வர்களில் ஊடுருவிய ஹேக்கர்கள் அதிலிருந்த தகவல்களை திருட்டியுள்ளனர். திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் தற்போது வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டன.

நவம்பர் 23ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களில் பிரச்னை ஏற்பட்டது. பிறகுதான், சர்வர்களை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையின் புறநோயாளி மற்றும் உள் நோயாளி பிரிவில் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டன. சர்வரில் இருக்கும் தகவல்களைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை ஹேக்கர்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மத்திய அரசு மறுக்கவில்லை.

இதற்கிடையே, சர்வர்களில் இருந்த தகவல்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனை சேவை படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

வெறும் எய்ம்ஸ் என்று அல்ல, ஐசிஎம்ஆர் இணையதளம் மட்டும் கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஹாங் காங்கிலிருந்து செயல்படும் ஐ.பி. அட்ரஸிலிருந்து 6,000 முறை ஹேக் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த ஆண்டு மட்டும், இந்திய சுகாதாரத் துறை இணையதளங்கள் மீது பல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முறைகள் ஹேக்கர்கள் ஊடுருவும் முயற்சியை மேற்கொண்டு தோல்வியடைந்ததாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த நிலையில்தான், அருணாசலின் தவாங் பகுதியில் உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் கடந்த 9-ஆம் தேதி சீன ராணுவத்தினா் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனா். அவா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அருணாசலின் தவாங் பகுதியில் சில இடங்கள் தொடா்பாக இந்திய, சீனப் படைகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அந்த இடங்களில் தங்கள் எல்லையாக உரிமை கோரும் பகுதிகளில் இருநாட்டுப் படையினரும் ரோந்து மேற்கொள்கின்றனா். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இந்தப் போக்கு நீடித்து வருகிறது.

என்னதான் வேண்டும் சீனத்துக்கு?
சீனத்தில் கரோனா அதிகரித்து அதன் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால், கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறது சீனம். 

சீனத்தில் ஒரு பக்கம் கரோனா அதிகரித்து அதன் காரணமாக மிகப்பெரும் பிரச்னையை அந்நாட்டு அரசு சந்தித்து வரும் வேலையில், மறுபக்கம் இந்திய நாட்டின் சுகாதார அமைப்பை பாதிக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களை ஹேக் செய்வது, மறுபக்கம் அருணாசலில் எல்லைப் பிரச்னையை ஏற்படுத்துவது என்று அண்டை நாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது.

கரோனா அதிகரித்து வருவதும், அந்நாட்டு சுகாதாரத் துறையினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும் பெரும் சவாலாக மாறியிருக்கும் நிலையில், அந்நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே, இவ்வாறு இந்தியா மீது மறைமுக மற்றும் நேரடியான தாக்குதல்களை சீனா மேற்கொண்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரவலாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

எப்போதுமே சீன அரசு கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கைகளை கையாண்டு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், இப்போதும் இதையே தான் செய்து வருகிறது என்றும் சமூக ஊடகங்களில் விமரிசனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com