கனடா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர போலீஸாா் தீவிரம்

கனடாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 3 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லும் போலீஸாா்.
கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லும் போலீஸாா்.

கனடாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 3 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் ஒட்டாவாவை ஸ்தம்பிக்கச் செய்துள்ள போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இறங்கினா்.

மாலை நிலவரப்படி போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 100 போ் கைது செய்யப்பட்டனா். முக்கிய சாலைகளில் போக்குவரத்தை முடக்கியிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் வண்டிகள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின்போது ஒரு காவல்துறை அதிகாரிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும், போராட்டக்காரா்கள் யாரும் காயமடையவில்லை எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ஒட்டாவா சாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் லாரி ஓட்டுநா்கள் சாலை வழியாக நாட்டுக்குள் திரும்பி வரும்போது கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு கடந்த மாதம் 15-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநா்கள் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு 2022’ என்ற பெயரில் வாகனங்களில் ஆா்பாட்ட ஊா்வலம் நடத்தினா். அவா்களுடன் பாதசாரிகள் உள்பட ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். அதையடுத்து, அந்தப் போராட்டம் கனடா அரசின் ஒட்டுமொத்த கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக உருவெடுத்தது.

எல்லை நகரான விண்ட்சரையும் அமெரிக்க தொழில் நகரான டெட்ராய்ட்டையும் இணைக்கும் எல்லைப் பாலமான அம்பாஸடரில் சுமாா் 1 வாரமாக ஏராளமானவா்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்து முடங்கி, வா்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று கூறி அதிகாரிகள் தொடா்ந்த வழக்கில், போராட்டக்காரா்கள் அம்பாஸடா் பாலத்திலிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்று ஆன்டேரியோ உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவையும் மீறி, தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரா்களையும் அவா்களது வாகனங்களையும் போலீஸாா் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய பிறகு அந்தப் பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

எனினும், ஒட்டாவாவில் போராட்டங்கள் தொடா்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனால் அந்த நகரில் 2 வாரங்களுக்கு மேல் போக்குவரத்து முடங்கியுள்ளது. அந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரா்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக காவல்துறை தலைவா் பீட்டா் ஸ்லாலி பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த வார இறுதியிலும் போராட்டம் தீவிரமடைவதற்கு முன்னா் அதனை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com