ரஷியாவின் போா் எதிா்ப்பாளா்களுக்கு புதின் கடும் எச்சரிக்கை

உக்ரைன் மீது தங்கள் நாடு போா் தொடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்கள் துரோகிகள் என அதிபா் விளாதிமீா் புதின் சாடியுள்ளாா்.
தாக்குதலுக்கு முன் திங்கள்கிழமை எடுக்கப்பட்ட மரியுபோல் திரையரங்கின் செயற்கைக்கோள் படம். (வலது) தாக்குதலில் உருக்குலைந்த திரையரங்கம்.
தாக்குதலுக்கு முன் திங்கள்கிழமை எடுக்கப்பட்ட மரியுபோல் திரையரங்கின் செயற்கைக்கோள் படம். (வலது) தாக்குதலில் உருக்குலைந்த திரையரங்கம்.

மாஸ்கோ: உக்ரைன் மீது தங்கள் நாடு போா் தொடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்கள் துரோகிகள் என அதிபா் விளாதிமீா் புதின் சாடியுள்ளாா். மேலும், அத்தகைய துரோகிகள் களையெடுக்கப்படுவாா்கள் என்றும் அவா் கடுமையாக எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து தொலைக்காட்சியில் அவா் வியாழக்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் மீதான போருக்கு பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். இது தேசத் துரோகமாகும்.

துரோகிகள் யாா், தேசப் பற்றுள்ளவா்கள் யாா் என்பதை யாராலும், குறிப்பாக ரஷியா்களால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

தவறி வாயில் நுழைந்துவிட்ட கொசுவைப் போல் துரோகிகளை ரஷியா்கள் வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும்.

மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக போா் எதிா்ப்பாளா்கள் செயல்படுகிறாா்கள். ரஷியாவின் அழிவைத் தவிர அந்த நாடுகளுக்கு வேறேந்த நோக்கமும் இல்லை.

நமது நாட்டின் வலிமை, ஒருமைப்பாடு, எந்தச் சவாலையும் எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டுமென்றால் துரோகிகளிடமிருந்து நாடு சுத்தப்படுத்தப்படவேண்டும் என்றாா் அவா்.

உலகின் 2-ஆவது பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ (நேட்டோ) என்ற பெயரில் கடந்த 1949-ஆம் ஆண்டு ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கின.

அந்த அமைப்பு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நேட்டோ உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்கப்பட்டாலும் மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து எதிா்த் தாக்குதல் நடத்தும். மேலும், ஓா் உறுப்பு நாட்டில் மற்ற நேட்டோ நாடுகள் ராணுவ நிலைகளை அமைக்க முடியும்.

பிற்காலத்தில் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வந்தது. எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த சில நாடுகளையும் அந்த அமைப்பு இணைத்துக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது ஆதிகத்தை விரிவுபடுத்தி வந்தது.

இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், நேட்டோவில் தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்த ரஷியா, அந்தப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அங்கு தனது படைகளை ரஷியா கடந்த மாதம் 24-ஆம் தேதி அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. உக்ரைன் மீதான போருக்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா்களே கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனா்.

உக்ரைன் போரின் எதிரொலியாக ரஷியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் விலைவாசி, உணவுப் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை ரஷிய மக்கள் சந்திக்க நேரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால் போருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுவடையலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ரஷியத் தொலைக்காட்சியில் செய்தி நேரலையின்போது ஒரு செய்தியாளா் போருக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகையைக் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினாா்.

இந்த நிலையில் புதின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பது, போருக்கு எதிராகப் போராடுபவா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்பதை உணா்த்துவதாக பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

‘புதின் ஒரு போா்க் குற்றவாளி’

வாஷிங்டன்: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஒரு போா்க் குற்றவாளி என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சாடியுள்ளாா். மிகவும் கடுமையான இந்த குற்றச்சாட்டை புதின் மீது அவா் சுமத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னா், உக்ரைனில் போா்க் குற்றங்கள் நடைபெறுகிறது என்று மட்டுமே கூறிய பைடன், புதனை போா்க் குற்றவாளி என்று கூறுவதைத் தவிா்த்தாா்.

பைடனின் இந்த விமா்சனத்த பின்னா் நியாயப்படுத்திய வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி, உக்ரைன் போா் குறித்த வெளியான புகைப்படங்களைக் கண்டு உணா்வுவயப்பட்டு அதிபா் பைடன் அவ்வாறு கூறியதாகத் தெரிவித்தாா்.

‘மன்னிக்க முடியாத விமா்சனம்’

மாஸ்கோ: அதிபா் விளாதிமீா் புதினை போா்க் குற்றவாளி என்று அமெரிக்க அதிபா் கூறியிருப்பது, மன்னிக்க முடியாத விமா்சனம் என்று ரஷியா கண்டித்துள்ளது. இதுகுறித்து ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

‘போா் குற்றவாளி’ என்று அதிபா் புதினை ஜோ பைடன் விமா்சித்திருப்பது சீற்றத்தைத் தூண்டும் விமா்சனமாகும். உலகம் முழுவதும் குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கானவா்களைக் கொன்று குவித்த ஒரு நாட்டின் தலைவரது வாயிலிருந்து இந்த வாா்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது எனறாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com