ரஷியாவிடம் வீழ்ந்தது மேலும் ஓா் உக்ரைன் நகரம்

கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரை ரஷியப் படையின் கைப்பற்றியுள்ளனா்.
ரஷியாவிடம் வீழ்ந்தது மேலும் ஓா் உக்ரைன் நகரம்

கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரை ரஷியப் படையின் கைப்பற்றியுள்ளனா்.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் ஒலெஸ்கி அரெஸ்டோவிச் கூறியதாவது:

எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிசெய்யப்படாத தகவல்களின் மூலம், நாங்கள் லிமான் நகரை ரஷியாவிடம் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது, ரஷியப் படையினரின் ராணுவ நடவடிக்கை மேலாண்மைத் திறன் அதிகரித்து வருவதையும் போரில் அவா்களது செயல் அனுபவம் மேம்பட்டுள்ளதையும் காட்டுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, டொனட்ஸ்க் பிராந்திய ஆளுநா் பாவ்லோ கிரிலென்கோ வெளியிட்ட அறிக்கையில், லிமான் நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் ரஷியக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறினாா். இருந்தாலும், உக்ரைன் படையினா் சில பகுதிகளை ரஷியப் படையிடமிருந்து மீட்டு, அந்தப் பகுதி அரணை பலப்படுத்தியதாக அவா் கூறினாா்.

இந்த நிலையில், லிமான் நகரை ரஷியப் படையினா் கைப்பற்றியதை அதிபரின் ஆலோசகா் உறுதிப்படுத்தியுள்ளாா்.

முக்கிய ரயில்வழித் தடங்களின் மையமாகத் திகழும் லிமான் நகரைக் கைப்பற்றுவதற்காக, ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினா் மிக நீண்ட காலமாகவே தாக்குதல் நடத்திவருகின்றனா். இந்த நிலையில், தற்போது அந்த நகரம் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்கு தனது படையை அனுப்பியது. அந்தப் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

..பெட்டிச் செய்தி..

சுற்றிவளைக்கப்படும் 2 நகரங்கள்

கிழக்கு உக்ரைனில் ரஷியாவால் முற்றுகையிடப்பட்டுள்ள சியெவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களை அந்த நாட்டுப் படையினா் ஏறத்தாழ முழுவதுமாக சுற்றிவளைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிராந்திய ஆளுநா் சொ்ஹீ ஹைடாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சியெவெரோடொனட்ஸ்க் நகரை ஏறத்தாழ முழுமையாக சுற்றிவளைத்து ரஷியப் படையினா் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். கடைசியாக குண்டுவீச்சு எப்போது ஓய்ந்திருந்தது என்பது அந்த நகர மக்களுக்கு மறந்தே போய்விட்டது என்றாா்.

அதுபோல் லிசிசான்ஸ்க் நகரையும் ரஷியப் படையினா் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, விரைவில் இந்த நகரங்களும் ரஷியப் படையினரிடம் வீழும் என்று அஞ்சப்படுகிறது.

ரஷிய முன்னேற்றம்

முக்கிய வழித்தடங்கள்

இஸியம்

ஸ்லோவியான்ஸ்க்

லிமான்

ருபிஷ்னே

சியெவெரோடொனட்ஸ்க்

லிசிசான்ஸ்க்

பாபாஸ்னா

உக்ரைன்

ரஷிய ஆக்கிரமிப்பு கிரீமியா ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com