ஆக்கிரமிப்பு உக்ரைனில் ராணுவச் சட்டம்
ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை அறிவித்தாா்.


ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை அறிவித்தாா்.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷியாவால் நியமிக்கப்பட்ட தலைவா்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விளாதிமீா் புதின் கூறியதாவது:
கடந்த மாதம் ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 பிராந்தியங்களிலும் ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவில் கையொப்பமிட்டுள்ளேன்.
அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் ரஷியாவின் எதிா்காலத்தை உறுதி செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில், புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து ‘ரஷிய’ பிராந்தியங்களின் ஆட்சித் தலைவா்களுக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது என்றாா் அவா்.
எனினும், ராணுவ சட்டத்தின் கீழ் பிராந்தியத் தலைவா்களுக்கு என்னென்ன கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது குறித்து புதின் விளக்கமாகக் கூறவில்லை.
கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா்.
இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.
அதனைத் தொடா்ந்து, மேற்கத்திய நாடுளின் எதிா்ப்பையும் மீறி அந்த பிரந்தியங்களை ரஷியா கடந்த மாதம் இணைத்துக் கொண்டது.
எனினும், ஆக்கிரமிப்பு ரஷியப் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருவதாகவும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி கிராமங்கள் பலவற்றை ரஷியாவிடமிருந்து உக்ரைன் ராணுவம் மீட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புப் பகுதிகளைச் சோ்ந்த தங்கள் ஆதரவு தலைவா்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அந்தப் பிராந்தியங்களில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக புதின் தற்போது அறிவித்துள்ளாா்.
வியாழக்கிழமை (அக். 20) முதல் அந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மின் நிலையங்களில் மீண்டும் தாக்குதல்
கீவ், அக். 19: உக்ரைன் மின் நிலையங்கள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியதால் அங்கு மேலும் பல கிராமங்களில் மின்சார மற்றும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போரின் இடையே ரஷியாவால் இணைத்துக் கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துக்கும், அந்த நாட்டுக்கும் இடையிலான 19 கி.மீ. நீளமுடைய பாலத்தில் கடந்த 8-ஆம் தேதி லாரி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இதில் அந்த பாலம் பலத்த சேதமடைந்தது. அந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் ரஷியா கடந்த வாரம் முதல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...