பிரிட்டனின் கொலைகார செவிலியருக்கு என்ன தண்டனை? அறிவித்தது நீதிமன்றம்

பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் 7 சிசுக்களைக் கொன்ற செவிலியருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனின் கொலைகார செவிலியருக்கு என்ன தண்டனை? அறிவித்தது நீதிமன்றம்

பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் 7 சிசுக்களைக் கொன்ற செவிலியருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் லூசி லெட்பி மீது 7 சிசுக்களை கொன்றதாகவும், 6 சிசுக்களை கொலை செய்ய முயன்றதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. இதன் மூலம், லூசி லெட்பி என்ற அந்த 33 வயது பெண் அந்த நாட்டின் மிக குரூரமான தொடா் சிசு கொலையாளி என்ற பெயரைப் பெற்றார். இந்தநிலையில், இன்று அவருக்கு தண்டனை விவரத்தை வெளியிட்ட நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கவுன்டஸ் செஸ்டா் மருத்துவமனையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் லூசி லெட்பி பணியாற்றினாா்.

அந்த காலகட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறுப் பிரிவில் சிசிக்கள் உயிரிழப்பது, திடீா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன.

இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிா்வாகம் கூறுகிறது.

மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினா். அந்த விசாரணையின்போது, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் குறிப்பேடுகளை லூசி லெட்பியின் இல்லத்திலிருந்து பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றில் ‘நான் ஒரு பாவி’, ‘இதற்கு நான்தான் காரணம்’ என்பது போன்ற வாசகங்களை அவா் எழுதியிருப்பதைக் கண்டனா்.

அதையடுத்து, லூசி லெட்பி கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான நடைபெற்று வந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை தற்போது வெளியிட்டுள்ள நீதிபதிகள், லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் 7 சிசுக்களைக் கொன்றது, 6 சிசுக்களைக் கொல்ல முயன்றது ஆகியவை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

செவிலியர் லூசி லெட்பி மீது முதல் முறையாக சந்தேகத்தை எழுப்பியது இந்திய மருத்துவர் ரவி ஜெயராம். செவிலியர் குறித்து ரவி ஜெயராம் கூறுகையில், எனக்கு இதைச் சொல்லவே தர்மசங்கடமாக உள்ளது. சிசுக்களின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, செவிலியர் லூசி லெட்பி, எதையும் செய்யாமல், குழந்தைகளை சாகவிட்டார். என்னால் இதனை உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது அந்த சிசுக்களைக் காப்பாற்றியிருந்தால் அவை தற்போது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த சிசுக்கள் இப்போது இல்லை என்று குறிப்பிட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு திடீரென அதிகமான சிசுக்கள் மரணமடைந்தபோது, மருத்துவர்கள் அவசரக் கூட்டங்களை நடத்தி ஆலோசித்தோம். அப்போது, மருத்துவமனை நிர்வாகத்திடம் லெட்பி பற்றி தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிறகு நாங்கள் காவல்துறையிடமும் பேசினோம். அப்போதுதான் அவர்களுக்கு லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டது என்றார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லெட்பிக்கு எதிராக பல ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அதில், லெட்பி, சிசுக்களின் நரம்புகளில், வெறும் காற்றை நிரப்பி ஊசியை செலுத்துவது, இன்சுலின் செலுத்துவது, இரைப்பைக் குடலுக்குள் காற்றை செலுத்துவது, அளவுக்கு அதிகமாக பாலைக் குடிக்க வைப்பது அல்லது ஏதேனும் திரவங்களைக் குடிக்க வைப்பது போன்றவற்றை செய்திருப்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால், அவர் குழந்தைகளைக் கொல்லும் போது அவை இயற்கையாக இறந்தது போல உடன் இருப்பவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளதும் விசாரணையில் ஆதாரங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை லெட்பி மறுத்து வந்தார். அவா் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா், லூசி லெட்பி ஒரு அப்பாவி என்றும், தாழ்வு மனப்பான்மை கொண்ட அவா் சிசுக்கள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணா்ச்சியில் அந்தக் குறிப்புகளை தனக்குத் தானாக எழுதியிருந்ததாகவும் கூறினாா்.

எனினும், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா்.

அவா் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, லூசி லெட்பிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com