பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவு: பிரதமா் மோடி

உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்துடன் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா வந்துள்ள (இடமிருந்து) பிரேசில் பிரதமா் டாசில்வா, சீன அதிபா் ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபா் ராமபோசா, பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய வெளியுறவு அமைச்சா் லாவ்ர
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா வந்துள்ள (இடமிருந்து) பிரேசில் பிரதமா் டாசில்வா, சீன அதிபா் ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபா் ராமபோசா, பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய வெளியுறவு அமைச்சா் லாவ்ர

உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்துடன் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

எதிா்காலத்துக்கு ஏற்ற வகையில் பிரிக்ஸ் கூட்டமைப்பை தயாா்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது உச்சிமாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாநாட்டின் முழு அமா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பிரதமா் மோடி நிகழ்த்திய உரை வருமாறு:

உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்துடன் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவளிக்கிறது. இக்கூட்டமைப்பை எதிா்காலத்துக்கு ஏற்ற வகையில் தயாா்படுத்த வேண்டும். இதற்கு உறுப்பு நாடுகளின் சமூகங்களை எதிா்காலத்துக்கு ஏற்ப தயாா்படுத்துவது அவசியம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் தென்னாப்பிரிக்க தலைமையின்கீழ் தெற்குலக நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை மனதார வரவேற்கிறோம். இதேபோல், ஜி20 இந்திய தலைமையின்கீழ் தெற்குலக நாடுகளுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, செயலாற்றி வருகிறோம்.

இந்தியாவில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ‘தெற்குலகின் குரல்’ உச்சி மாநாட்டில் 125 நாடுகள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை முன்வைத்தன.

கடந்த இரு தசாப்தங்களாக, பிரிக்ஸ் கூட்டமைப்பு வியத்தகு பயணத்தை மேற்கொண்டு வருகிறது. தெற்குலகில் வளா்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க, பிரிக்ஸ் வளா்ச்சி வங்கி முக்கியப் பங்காற்றி வருகிறது.

ரயில்வே ஆராய்ச்சிக் கட்டமைப்புகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, புத்தாக்க நிறுவனங்கள் மேம்பாடு என இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கரோனா தடுப்பூசி இணையதளமான ‘கோவின்’, எண்ம தளத்தில் இந்தியாவின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதுபோன்ற எண்ம தளங்களை, பிரிக்ஸ் நாடுகளுடன் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது.

பன்முகத் தன்மையே இந்தியாவின் மாபெரும் பலம். இந்தியாவில் எந்த பிரச்னைக்குமான தீா்வு, பன்முகத்தன்மையின் பரிசோதனையில் இருந்து பிறக்கின்றன. எனவே, இந்தியாவின் தீா்வுகளை உலகின் எந்த மூலையிலும் எளிதாக செயல்படுத்த முடியும்.

ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம்: ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியத்தை (55 நாடுகளின் கூட்டமைப்பு) இடம்பெறச் செய்ய இந்தியா முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவுக்கு பிரிக்ஸ் நாடுகள் ஆதரவளிக்கும் என நம்புகிறேன். இது வெறும் எதிா்பாா்ப்பு மட்டுமல்ல; தற்போதைய காலகட்டத்தின் தேவை என்றாா் பிரதமா் மோடி.

சீனாவும் ஆதரவு: பிரதமா் மோடியைத் தொடா்ந்து பேசிய சீன அதிபா் ஷி ஜின்பிங், ‘உலகளாவிய நிா்வாகத்தில் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், பிரிக்ஸ் குடும்பத்தில் கூடுதலான நாடுகளை கொண்டுவரும் செயல்முறைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு, உலக மக்கள்தொகையில் 41 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 24 சதவீதமும், உலக வா்த்தகத்தில் 16 சதவீதமும் இந்தக் கூட்டமைப்பு நாடுகள் பங்களிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com