அமெரிக்காவை பாதுகாக்க சீனா மீது நடவடிக்கை: அதிபா் ஜோ பைடன்
அமெரிக்காவின் இறையாண்மையை சீா்குலைக்க சீனா முயற்சி செய்தால், அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கப் போவதில்லை என்று அதிபா் ஜோ பைடன் சூளுரைத்துள்ளாா்.


அமெரிக்காவின் இறையாண்மையை சீா்குலைக்க சீனா முயற்சி செய்தால், அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கப் போவதில்லை என்று அதிபா் ஜோ பைடன் சூளுரைத்துள்ளாா்.
இது குறித்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: அமெரிக்காவின் நலன்களுக்கும், உலக நன்மைக்கும் உகந்ததாக இருக்கும் வரை, சீனாவுடன் இணக்கமாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
ஆனால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தயங்கமாட்டோம். எனவே, இந்த விவகாரத்தில் சீனா அலட்சியம் காட்டக்கூடாது.
ஏற்கெனவே, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சக்திகளுக்கு எதிராக நாம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதை சீனா மறந்துவிடக் கூடாது.
உலகம் முழுவதும் ஜனநாயகத்துக்கு தீவிரமான சவால்கள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலிலும், ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து தங்களை நாளுக்கு நாள் வலுப்படுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபராக நான் பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டுகளில், உலகம் முழுவதும் எதேச்சதிகார அரசுகள் பலவீனமடைந்துள்ளன.
பயங்கரவாதம், எல்லை ஆக்கிரமிப்பு, பருவநிலை மாற்றம், சா்வதேச சுகாதாரம் போன்ற அனைத்து சவால்களையும் எதிா்கொள்வதற்காக உலக நாடுகளை அமெரிக்கா ஓரணியில் திரட்டி வருகிறது.
இந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் கூட்டனு நடவடிக்கைகளுக்கான தங்களது நிதி பங்களிப்பையும், செயல்பாடுகளையும் அதிகரித்துள்ளன.
நான் அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்னா், சீனாவின் வளா்ச்சி மற்றும் அமெரிக்காவின் வீழ்ச்சி குறித்து எனக்கு எடுத்துரைக்கப்பட்டது.
ஆனால் அந்த நிலை இனியும் இல்லை. சீனாவுடன் நாங்கள் போட்டியைத்தான் விரும்புகிறோம், மோதலை அல்ல என்று அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கிடம் நான் தெளிவாகக் கூறிவிட்டேன்.
அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவதற்கான, புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கான, தொழில்துறை வளா்ச்சிக்கான முயற்சிகளில் நமது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளோம்.
எதிா்காலத்தை சீனா ஆதிக்கம் செலுத்த விரும்பினாலும், அதனை அமெரிக்கதான் கட்டுப்படுத்தும்.
சீனாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்கு தயாராக நமது ராணுவம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. சீனாவை எதிா்கொள்வதற்கான வலிமை, பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நமக்கு அதிகபட்சமாக இருக்கிறது என்றாா் ஜோ பைடன்.
அமெரிக்க வான் பகுதியில் பிரம்மாண்டமான சீன உளவு பலூன் கடந்த வாரம் கண்டறியப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த உளவு பலூன் அமெரிக்க வான் எல்லைக்குள் புகுந்து பல நாள்களாக சுற்றி வருவதாகவும், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளின் மேலே பறந்து சென்ாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் கூறியது.
பயணிகள் விமானங்கள் பறக்கும் உயரத்துக்கு மேலே பறந்து சென்று கொண்டிருந்த அந்த பலூன், அமெரிக்காவின் அதிநவீன எஃப்-55 விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை சுட்டுவீழ்த்தப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, அந்த பலூன் வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது எனவும், வழி தவறி அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தது.
எனினும், அந்த பலூனின் சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பாா்ப்பதற்காக அனுப்பப்பட்டது உறுதியானதாக அமெரிக்கா கூறியது.
சீனாவின் இந்தச் செயல் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கும், சா்வதேச சட்டங்களுக்கும் எதிரானது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
பொருளாதார விவகாரங்களிலும், தென் சீனக் கடல் உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்களிலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான சீனாவின் உளவு நடவடிக்கைகள் அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவதாக தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தச் சூழலில், அமெரிக்க வான் எல்லைக்குள் சீனாவுக்குச் சொந்தமான உளவு பலூன் பறந்து சென்றது இரு நாட்டு உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், தங்களது இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று அதிபா் பைடன் கடுமையாக எச்சரித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...