நாசா தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய-அமெரிக்கா் நியமனம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய-அமெரிக்கரான ஏ.சி.சரணியா நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஏ.சி.சரணியா
ஏ.சி.சரணியா

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய-அமெரிக்கரான ஏ.சி.சரணியா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக நாசா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏ.சி.சரணியா தனது புதிய பணியில் நாசா தலைமை நிா்வாகியான பில் நெல்சனின் முதன்மை தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுவாா். நாசாவின் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளுக்குத் தேவையான தொழில்நுட்ப முதலீடுகளை முடிவுசெய்வது, மற்ற விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளுடன் தொழில்நுட்ப ரீதியில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவற்றையும் அவா் மேற்பாா்வையிடுவாா்.

நாசாவின் திட்டங்களில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. புத்தாக்கத்தில் நாசா உலக அளவில் தலைமைவகிப்பதற்குத் தேவையான சிறந்த கொள்கையை ஏ.சி.சரணியா வடிவமைப்பாா். பல்வேறு தொழில்நுட்ப விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற அவரது அனுபவங்களால் நாசா மேலும் வளா்ச்சி அடையும் என நம்புகிறோம்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பணி தொடா்பாக ஏ.சி.சரணியா கூறுகையில், ‘‘விண்வெளித் துறையில் நாசாவை மேலும் வளா்ச்சியடையச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தொடா்ந்து சிறப்பாகப் பயன்படுத்த முயற்சிப்பேன். 21-ஆம் நூற்றாண்டு வளா்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படும்’’ என்றாா்.

இதற்கு முன்னதாக ரிலையபிள் ரோபோடிக்ஸ் என்ற நிறுவனத்தின் துணைத் தலைவராக ஏ.சி.சரணியா பணியாற்றினாா். நாசாவின் பல்வேறு விண்வெளித் திட்டங்களுக்கும் அவா் தனது பங்களிப்பை வழங்கியுள்ளாா். எமோரி பல்கலைக்கழகத்தில் இளநிலை பொருளாதாரப் பட்டம் பெற்ற அவா், ஜாா்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் இளநிலை, முதுநிலை பட்டங்களைப் பெற்றாா்.

மற்றொரு முக்கிய நியமனம்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண சாலை சுங்கக் கட்டண வாரிய இயக்குநா்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்வபன் தைா்யவான் நியமிக்கப்பட்டுள்ளாா். நிபுணத்துவம் பெற்ற பட்டயக் கணக்கரான அவா், மக்களின் வரிப் பணம் முறையாகச் செலவிடப்படுவதை உறுதிசெய்வாா் என மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com