
கடுமையான வறட்சி காரணமாக, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் உருகுவே நாட்டின் தலைநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அறிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறை நிலைமையை சமாளிக்கும் வகையில், இந்த அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும், சான் ஜோஸ் ஆற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும், தலைநகரில் உள்ள 21 ஆயிரம் குடும்பங்களுக்கு, இலவசமாக 2 லிட்டர் தண்ணீரை அரசு வழங்கும் என்றும், குடிநீர் பாட்டிலுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் ஊருகுவே அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஒரு சில வாரங்களுக்கு நாட்டில் மழைக்கான முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாத காரணத்தாலும், தற்போதைய கடுமையான தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக உருகுவேயில் கடந்த 7 மாதங்களாக மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், நாட்டின் 60 சதவீத நீர் ஆதாரமாக விளங்கிய அணைக்கட்டுகளிலும் தண்ணீர் வறண்டுபோனதால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரிசியும், சர்க்கரையும் ரேஷனில் அளந்து வாங்குவது போல, அரசு கொடுக்கும் 2 லிட்டர் தண்ணீருக்காக பல மணி நேரம் அந்நாட்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை, உலக நாடுகளின் அடுத்த எதிர்கால சம்பவங்களுக்கான துவக்கமாகக் கூட இருக்கலாமோ என்ற சந்தேகம் நிச்சயம் எழுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.