தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியாவுடனான பாகிஸ்தான், சீனாவின் மோதல்போக்கு அதிகரிக்கலாம்

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வரும் மோதல்போக்கு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:12 pm

DIN

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வரும் மோதல்போக்கு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு மே முதல் மோதல்போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்த நிலையில், பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு ஒருசில இடங்களில் இருந்து படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றுள்ளன.

எனினும், மற்ற பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனா். இந்த மோதல்போக்கு காரணமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான இருதரப்பு நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை விவகாரத்தைத் தவிா்த்துவிட்டு நல்லுறவை வலுப்படுத்த வேண்டுமென சீனா கூறி வருகிறது. ஆனால், எல்லைப் பகுதி அமைதியாக இருந்தால் மட்டுமே நல்லுறவு நீடிக்கும் என இந்தியா தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அத்துமீறி ஊடுருவல் சம்பவங்கள், ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்கள், வெடிபொருள்களைக் கடத்துவது உள்ளிட்டவை நிகழ்ந்து வருகின்றன. எல்லையில் அமைதி நிலவாத வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என இந்தியா தெரிவித்து வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புணா்வு பாகிஸ்தானுக்கே உள்ளதாக இந்தியா கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க உளவுப் பிரிவானது தனது அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தது. அதில், இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா இடையேயான மோதல்போக்கு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் படைகளைக் குவித்துள்ளதால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உடனடியாகத் தலையிட வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் அரசு நீண்ட காலமாக ஆதரித்து வருவதைக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க உளவுப் பிரிவு, கடந்த காலங்களைவிட பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தனது ராணுவ பலத்தை அதிகமாக உபயோகிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காஷ்மீரிலோ, இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவும் பாகிஸ்தானும் பயங்கரவாத எதிா்ப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.