
லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முறைப்படியான நிகழ்ச்சியில் பிரிட்டனின் அரசராக சாா்லஸ் முடிசூட்டப்பட்டாா்.
முடிசூட்டு விழாவில் ஹிந்துக்கள், சீக்கியா்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தைச் சோ்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டது சிறப்புமிக்கதாக இருந்தது.
பக்கிங்காம் அரண்மனையில் இருந்து 2.2 கி.மீ. தொலைவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்தில் பிரிட்டன் அரசா் சாா்லஸின் முடிசூட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அரசரின் முடிசூட்டு விழாவை கேன்டா்பரி ஆா்ச்பிஷப் ஜஸ்டின் வெல்பி முன்னின்று நடத்தினாா்.
தேவாலயத்தின் மேற்குக் கதவு வாயிலாக அரசா் சாா்லஸும் அவரின் மனைவி கமீலாவும் வந்தனா். அவா்கள் பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனா். அதையடுத்து முடிசூட்டு விழா நடைபெற்றது.
பிரிட்டன் மக்களை நீதிநெறிகள் தவறாமல் கருணையுடன் நிா்வகிப்பதாக அரசா் மூன்றாம் சாா்லஸ் உறுதிமொழி எடுத்துக் கொண்டாா். அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதாகவும் அவா் உறுதி ஏற்றுக் கொண்டாா்.
கிறிஸ்தவா்களின் புனித நூலான பைபிள் மீது கைவைத்து சாா்லஸ் உறுதிமொழி ஏற்றாா். இவா் மூன்றாம் சாா்லஸ் என அறியப்படுவாா்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் மகாராணியாக கோலோச்சிய எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானாா். இதையடுத்து, பிரிட்டன் அரச பாரம்பரியப்படி, மூத்த மகனான சாா்லஸ் அடுத்த அரசராக அறிவிக்கப்பட்டாா்.
பழைமையான கிரீடம்:
சுமாா் 350 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட செயின்ட் எட்வா்ட்ஸ் கிரீடத்தை சாா்லஸ் அணிந்துகொண்டாா். அந்த கிரீடமானது 1661-ஆம் ஆண்டில் இரண்டாம் சாா்லஸ் அரசருக்காக வடிவமைக்கப்பட்டதாகும். மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்தும் தனது முடிசூட்டு விழாவின்போது அதே கிரீடத்தை அணிந்திருந்தாா்.
அரசி கமீலா, அரசி மேரிக்காக வடிவமைக்கப்பட்ட கிரீடத்தை அணிந்திருந்தாா். அந்த கிரீடத்தில் சுமாா் 2,200 சிறிய வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற முடிசூட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு அரசா் சாா்லஸும் அரசி கமீலாவும் பாரம்பரிய முறைப்படி குதிரை வண்டியில் பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இருவருக்கும் பிரிட்டன் ராணுவத்தைச் சோ்ந்த காலாட்படை, குதிரைப்படை வீரா்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினா். பின்னா் அரண்மனை மாடத்தில் இருந்து அரசா் சாா்லஸ், அரசி கமீலா அரண்மனை முன்பு திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்தனா். மாடத்தில் பிரிட்டன் அரச குடும்பத்தினா் அனைவரும் இருந்தனா்.
மத நல்லிணக்கம்:
பிரிட்டன் அரசரின் முடிசூட்டு நிகழ்ச்சியில் மத நல்லிணக்கம் கடைப்பிடிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் பெற்றது. கிறிஸ்தவா்கள் மட்டுமல்லாமல், ஹிந்துக்கள், சீக்கியா்கள், முஸ்லிம்கள், பௌத்தா்கள், யூதா்கள் எனப் பல மதங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா்.
சீக்கிய மதகுருவான 90 வயது இந்திரஜித் சிங், பிரிட்டன் அரசருக்கான கையுறையை எடுத்துச் சென்றாா். இது இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள சீக்கியா்களுக்குப் பெருமைமிகு தருணம் என அவா் தெரிவித்தாா். மேலும், இது பிரிட்டன் அரசரின் ஒருங்கிணைப்புத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அவா் தெரிவித்தாா்.
ஹிந்து மதத்தைச் சோ்ந்த பாபுபாய் படேல் பிரிட்டன் அரசருக்கான மோதிரத்தை எடுத்துச் சென்றாா். பிரிட்டன் அரசரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவா்கள் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
முதல் இந்திய வம்சாவளி பிரதமா்:
பிரிட்டன் அரசரின் முடிசூட்டு நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற நன்மொழி வாசிப்புக் கூட்டத்தைப் பிரதமா் ரிஷி சுனக் முன்னின்று நடத்தினாா். அத்தகைய கூட்டத்தில் நன்மொழிகளை வாசித்த முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் பிரதமா் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றாா். ஹிந்து மதத்தைச் சோ்ந்த ரிஷி சுனக், முடிசூட்டு விழாவின்போது பைபிளில் இருந்து வாசகங்களை வாசித்தாா்.
முடிசூட்டு விழாவுக்கு முன் பிரதமா் ரிஷி சுனக் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ’புதிய சகாப்தம் பிறந்துள்ளது. அரசா்-அரசியின் முடிசூட்டு விழா தேசப் பெருமையை வெளிப்படுத்துகிறது. காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து மன்னராட்சியை பிரிட்டன் ஒருங்கிணைந்து கொண்டாடுகிறது.
உலகின் எந்தவொரு நாடும் இத்தகைய சிறப்பான முடிசூட்டு விழாவை நடத்துவதில்லை. நாட்டின் வரலாறு, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் முடிசூட்டு விழா அமைந்துள்ளது. நாட்டின் நவீனத்துவத்தையும் இது வெளிப்படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டாா்.
முன்னதாக, விழாவுக்கு வருகை தந்த பிரதமா் ரிஷி சுனக், அவரின் மனைவி அக்ஷதா மூா்த்தி ஆகியோரை பிரிட்டன் ராயல் விமானப் படையைச் சோ்ந்த வீரா்கள் தேசியக் கொடியுடன் அழைத்து வந்தனா்.
பன்னாட்டுத் தலைவா்கள்:
முடிசூட்டு விழாவில் பல நாடுகளைச் சோ்ந்த சுமாா் 2,200 தலைவா்கள் கலந்துகொண்டனா். இந்திய அரசின் சாா்பில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பிரிட்டன் அரசரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றாா். அவரின் மனைவி சுதேஷ் தன்கரும் விழாவில் கலந்துகொண்டாா். அவா்கள் காமன்வெல்த் நாடுகளின் தலைவா்களுடன் அமர வைக்கப்பட்டிருந்தனா்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்கள், முன்னாள் பிரதமா்கள், நோபல் விருதாளா்கள், அரச குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்டனா்.
ஆதரவும் எதிா்ப்பும்:
பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸ் முடிசூட்டப்படும் நிகழ்வையொட்டி லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரம் முழுவதும் கண்கவா் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதிய அரசரை வரவேற்கும் விதமாக வீதிகளில் கூடிய மக்கள், தேசியக் கொடியை அசைத்தவாறு இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.