அமெரிக்கா: கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய மாணவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவர் உயிரிழந்ததாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய மாணவர் உயிரிழப்பு
Published on
Updated on
1 min read

அமெரிக்க உடற்பயிற்சி நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானதில், பலத்த காயமடைந்த இந்திய மாணவர் வருண்ராஜ் உயிரிழந்ததாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வால்பரைசோ பல்கலைக்கழகம் விடுத்த அறிக்கையில், “வருண் ராஜின் மறைவை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் பல்கலைக்கழகம் அதன் சொந்தம் ஒன்றை இழந்துவிட்டது. வருணின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வருணின் குடும்பத்தினருடன் பல்கலைக்கழகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது, இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி மற்றும் ஆதரவை வழங்குவோம். நவம்பர் 16-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் வருண்ராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வந்த வருண் ராஜ்(24) என்ற தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞரை ஜோர்டான் ஆண்ட்ரேட் என்பவா் அக்டோபர் 29-ஆம் தேதி இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரின் பொது உடற்பயிற்சி நிலையத்தில் கத்தியால் குத்தினாா்.

அதில் பலத்த காயமடைந்த வருண் ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து உயா் சிகிச்சைக்காக ஃபோா்ட் வைனில் உள்ள லூதரன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய ஜோர்டான் ஆண்ட்ரேட் கைது செய்யப்பட்டு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டார்.

வருணின் சிகிச்சைக்காக வட அமெரிக்க தெலுங்கு சங்கம் வருணின் குடும்பத்திற்காக GoFundMe மூலம் 90,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com