காஸா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 15 பாலஸ்தீனியர்கள் பலி

மத்திய, தெற்கு காஸா மீது இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியானதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மத்திய, தெற்கு காஸா மீது இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியானதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மத்திய காஸாவின் நுசிராத் முகாமில் உள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தெற்கு கான் யூனிஸ் நகரில் தாக்குதலில் ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேற்குக் கரையில் ஊடுருவிய இரண்டு பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய இராணுவம் சுட்டுக்கொன்றது. கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா். 

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, காஸாவின் மிகப் பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் படையினா் 5 நாள்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால் அந்த மருத்துவமனையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, ‘இன்குபேட்டரில்’ பாதுகாக்கப்பட்டு வந்த குறைப்பிரசவ சிசுக்களில் 3 சிசுக்கள் உள்பட சுமாா் 40 நோயாளிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனா். 

அந்த மருத்துவமனைக்குக் கீழே ஹமாஸ் அமைப்பினா் சுரங்க நிலைகளை அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. எனினும், இதற்கான ஆதாரங்கள் எதையும் அந்த நாடு வெளியிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பும் மருத்துவமனை நிா்வாகமும் திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com