அமெரிக்காவில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் இஸ்லாமிய இளைஞர்கள்  மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். 
அமெரிக்காவில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன் :  அமெரிக்காவில் இஸ்லாமிய இளைஞர்கள்  மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதர்கள்  மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவில் பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் எதிர்ப்பு பிரசாரங்களும் அதிகரித்துள்ளன. மேலும்,  யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான   துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்  சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதன்காரணமாக, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், வெர்மோண்ட் மாகாணத்தின் பர்லிங்டன் நகரில் 3 பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பர்லிங்டன் நகரில் கடந்த சனியன்று (நவ.25), சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாலஸ்தீனியத்தை பூர்வீகமாக கொண்ட   20 வயதான  ஹிஷாம் அவர்தானி, கின்னன் அப்தல்ஹமித் மற்றும் தஹ்சீன் அலி அஹ்மத் ஆகிய மூன்று  இளைஞர்களையும் குறிவைத்து  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய 48 வயதான ஈட்டன் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம்  நடத்தப்பட்ட விசாரணையில், இளைஞர்கள் மூவரும் அரபு நாட்டு பழக்கவழக்கப்படி ஆடை அணிந்து நடந்து சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்  அவர்களை எளிதில் அடையாளம்  கண்டுகொண்டதாக தெரியவந்துள்ளது..    

இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இனவெறியால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவில் உள்ள மத்திய கிழக்கு புரிதல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து மிகுந்த கவலையடைந்ததாகவும், இச்சம்பவத்தை இனவெறி குற்றமாக கருதி முழுமையான விசாரணை நடத்திட சட்ட அமலாக்கத்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தும் நபர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு,  10,000 டாலர்கள் சன்மானமாக அளிக்கப்படும் என்று அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் அமைப்பு அறிக்கை  வெளியிட்டுள்ளது.    

முன்னதாக, கடந்த மாதம் சிகாகோ பகுதியில் 6 வயது இஸ்லாமிய சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com