கிழக்கு உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகளை தரைமட்டமாக்கிய ரஷிய ஏவுகணைகள்

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் பலத்த காயமடைந்தனர்.
கிழக்கு உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகளை தரைமட்டமாக்கிய ரஷிய ஏவுகணைகள்

கீவ் :  உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. போர் தொடங்கி கடந்த ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்தநிலையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியின் பல்வேறு நகரங்களில், குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து ரஷிய ராணுவத்தால் நேற்றிரவு(நவ.29)  நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இந்த கொடூர தாக்குதல்களில், ஒரு குழந்தை உள்பட  10 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் போக்ரோவ்ஸ்க், நோவோரோடிவ்கா மற்றும் மிர்நோஹ்ரேட் ஆகிய 3 நகரங்கள் மீது, ரஷிய ராணுவப் படைகள் நேற்றிரவு(நவ.29) ஒரே நேரத்தில், 6 எஸ்-300 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமென்கோ  தெரிவித்துள்ளார். 

நோவோரோடிவ்கா நகரில் ஒரு குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனிடையே, ஏவுகணை தாக்குதல்களால் கடும் பாதிப்பை சந்தித்த போக்ரோவ்ஸ்க் நகரில், அடுக்குமாடி குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், 9 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, 6 மாத கைக் குழந்தையை, ரத்தம் படிந்த தன் கைகளில் ஏந்தியபடி இடிபாடுகளில் சிக்கியிருந்த குடியிருப்புவாசி ஒருவரை  மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏவுகணை தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைப்பு காட்டி வரும் நிலையில், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதியான அவ்டீவ்கா நகரை குறிவைத்து ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com