எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடும் உணவு, தண்ணீர் பஞ்சம்: மோசமாகி வரும் காஸாவின் நிலை!

காஸாவில் நீர் மற்றும் உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு உருவாகியுள்ளது. தாக்குதலில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கப் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.

News image
அல்-அக்சா மருத்துவமனையில் காயமுற்ற நபர்
Updated On :15 அக்டோபர் 2023, 8:32 am

DIN

காஸா மக்கள் கடுமையான உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில், இதுவரை 2,329 பாலஸ்தீனர்கள் பலியாகியிருப்பதாகக் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த முந்தைய 5 போர்களை விட இந்தப் போர் அபாயகரமானதாக உருமாறி வருவதாகவும் ஆறு வாரங்கள் தொடர்ந்த 2014 போரைக் காட்டிலும் இப்போதைய போரில் பலி எண்ணிக்கை அதிகமெனவும் தெரிவித்துள்ளது காஸா அமைச்சகம்.

துண்டு பிரசுரங்கள், சமூக ஊடகங்கள் வழியாக மத்திய மற்றும் வடக்கு காஸா பகுதியில் இருந்த 11 லட்சம் மக்களை, தெற்கு காஸாவுக்குச் செல்ல காலக்கெடு விதித்திருந்தது இஸ்ரேல். அங்கிருக்கும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளையும் மருத்துவர்களையும் இடம்பெயரச் சொல்லி வற்புறுத்தியது. `இந்த நடவடிக்கை மரண தண்டனைக்கு ஒப்பானது’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் அவலம்

”ஆயிரக்கணக்கிலான மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மருத்துவமனையின் வளாகத்திலும் மரங்களுக்கு அடியிலும் நோயாளிகளின் படுக்கைகளுக்கு இடையேயும் மக்கள் தங்கியிருப்பதைக் காண முடிகிறது.” என்கிறார்  மருத்துவர் காஸன் அபு சிதா. 

மருத்துவமனைகளில் உள்ள பிணவறை நிரம்பி வழிவதால் ஐஸ் கிரீம் வாகனங்களில் இறந்தவர்களின் உடல்கள் பதனப்படுத்தப்படுகிறது. அதிலும் இடம் போதாத நிலையில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. துர்நாற்றமும் நோய்த் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கவலையுறுகிறார்கள் மருத்துவர்கள்.

இடப்பெயர்வில் காஸா மக்கள்

இடப்பெயர்வில் காஸா மக்கள்

தோல் கருகி, உறுப்புகளை இழந்து வலியால் துடிக்கிற நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க போதிய வலிநிவாரணி மருந்துகள் இருப்பில் கிடையாது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளார்கள் தொடர்ந்து பணியில் உள்ளார்கள். காயமுற்றவர்கள் தங்கள் முறைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது கவலைக்குரிய ஒன்று.

எகிப்து தனது எல்லைகளை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்காகத் திறந்துவிட ஒப்புக் கொண்டாலும்  இஸ்ரேல் அனுமதிப்பதாக இல்லை.

சுகாதாரமான நீர்

காஸாவின் எல்லைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேலின் முற்றுகை தொடர்கிறது. காஸாவில் மின்சாரம் இல்லாததாலும் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையங்கள் சிதைந்து விட்டதாலும் தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. நீர்ப் பற்றாக்குறையால் மக்கள் கடல் நீரையும் மாசுப்பட்ட நீரையும் அருந்தும் நிலையில் உள்ளனர்.

எரிபொருளும் நீரும் உடனடியாக வழங்கப்படவில்லையெனில் மக்கள் கடுமையான நீரிழப்பு நோயால் கொத்து கொத்தாக இறக்கும் நிலை ஏற்படும் என பாலஸ்தீனத்திற்கான ஐ.நா. முகமை எச்சரிக்கிறது. 

இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளான ஜபாலியா பகுதி

இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளான ஜபாலியா பகுதி

உணவு பஞ்சம்

பேக்கரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அப்படியும் ஆங்காங்கு கிடைக்கும் பிரட் பாக்கெட்களுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். வங்கிகள், ஏடிஎம்கள் முடங்கியதால் பணம் எடுக்க இயலாத நிலை உள்ளது. அதனால், கிடைக்கும் ரொட்டி பாக்கெட்களையும் வாங்கும் நிலையில் மக்கள் இல்லை. 

இஸ்ரேலின் நோக்கம்

ஏற்கெனவே வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகிற நிலையில், தெற்கிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் ஹமாஸின் உத்தியைத் தகர்த்து அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களில் நேரடி தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இந்த இடப்பெயர்வு மற்றும் உணவு தட்டுப்பாட்டால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை இதுவரை உலகம் காணாத பேரழிவாக இருக்கும் என மனிதநேய ஆர்வலர்கள் கவலையுறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.