இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - அதிபர் ஜோ பைடன் சந்திப்பு

இஸ்ரேல் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவ் நகரில் சந்தித்துப் பேசினார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - அதிபர் ஜோ பைடன் சந்திப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவ் நகரில் சந்தித்துப் பேசினார்.

இஸ்ரேல் - காஸா இடையே போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டாக சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்திருப்பதற்கு ஜோ பைடனுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என்று இதனை  விவரித்த நெதன்யாகு, இஸ்ரேலின் பின்னால் அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

இரு தலைவர்களின் சந்திப்பின்போது, ஜோ பைடனிடம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். அக்டோபர் 7ஆம் தேதி மற்றொரு கருப்புநாளாக மாறிவிட்டது. அதிபர் ஜோ பைடன் சொல்வதைப்போல ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைவிடவும் ஹமாஸ் மிக மோசமானதாக மாறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் - காஸா இடையேயான போர் 12வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார். விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வந்து அதிபரை வரவேற்றார்.

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். 

காஸா விவகாரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றிருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியாக ஜோா்தானுக்கும் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால், காஸாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்டதாக்குதலைத் தொடர்ந்து ஜோர்தானில் நடைபெறவிருந்து மாநாட்டை ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஜோ பைடனும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

எனினும் மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு தரப்பு மறுத்துள்ளது. 

முன்னதாக இந்தப் பயணம் குறித்து எக்ஸ் (ட்விட்டா்) ஊடகத்தில் அவா் வெளியிட்டிருந்த பதிவில், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனா். இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு எனது ஆதரவைத் தெரியப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு  செல்கிறேன்.

தற்போது அந்தப் பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது. இது குறித்து விவாதிப்பதற்காகவும், பாலஸ்தீனா்களின் சுய நிா்ணய உரிமைக்காக ஹமாஸ் அமைப்பினா் செயலாற்றவில்லை என்பதை உணா்த்துவதற்காகவும் ஜோா்டானுக்கும் செல்லவிருக்கிறேன் என்று தனது பதிவில் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.

ஜோ பைடன் செல்வதற்கு முன்னா் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், காஸாவில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு நாடுகளும், சேவை அமைப்புகளுக்கும் அளிக்கும் நிவாரணப் பொருள்களைக் கொண்டு சோ்ப்பதற்கான திட்டமொன்றை உருவாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

முன்னதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கவும், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் இஸ்ரேல் மற்றும் ஜோா்டானுக்கு ஜோ பைடன் செல்வதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தங்கள் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸாவில் 12 நாள்களாக இஸ்ரேல் படையினா் குண்டுமழை பொழிந்து வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com