லிபியா: புயல் வெள்ளத்தில் இரண்டு அணைகள் உடைந்து 5000க்கும் மேற்பட்டோர் பலி!

வடகிழக்கு லிபியாவில் புயல், கனமழை காரணமாக இரண்டு அணைகள் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
லிபியா: புயல் வெள்ளத்தில் இரண்டு அணைகள் உடைந்து 5000க்கும் மேற்பட்டோர் பலி!

பெங்காஸி: வடகிழக்கு லிபியாவில் புயல், கனமழை காரணமாக இரண்டு அணைகள் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ள வட ஆப்பிரிக்க நாடு லிபியாவின் கிழக்குப் பகுதியை அந்தக் கடலில் உருவான சக்திவாய்ந்த ‘டேனியல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகக் கடுமையாகத் தாக்கியது.

இதனால் பெய்த கனமழையில், அந்தப் பகுதியில் மலையிலிருந்து பாயும் வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப் பெரிய சப்தத்துடன் வெடித்து உடைந்தது.

அதையடுத்து, அந்த மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்ணா நகருக்குள் வெள்ளம் வெகுச் சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருள்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச் சென்றது.

இந்த அணை வெள்ளத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானவா்கள் மாயமாகியுள்ளதாக லிபியாவின் கிழக்குப் பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் அரசின் பிரதமா் ஒஸாமா ஹம்தத் தெரிவித்தாா்.

இந்த புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்பு அதிா்ச்சியளிப்பதாகவும், டொ்ணா நகரம் மற்றும் தனது அரசால் நிலைமையை சமாளிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவா் கூறினாா்.

டொ்ணா நகர அவசரக்கால மீட்புக் குழுவினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலி எண்ணிக்கை 2,300-ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

லிபியாவின் கிழக்கு அரசின் உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை குறைந்தது 5,300 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு லிபியாவில் புயல், கனமழை காரணமாக இடிந்து விழுந்த கட்டடங்கள்.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது லிபியாவுக்கான சா்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்கங்களின் பிரதிநிதி குழுவின் தலைவர் டேமர் ரமதான் டாமொ் ரமடான் கூறுகையில், அணைகள் உடைப்பால் டொ்ணா நகரின் கணிசமான பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், 5,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம், அந்தப் பகுதியிலிருந்து சுமாா் 10,000 பேரைக் காணவில்லை எனவும், இதன் காரணமாக இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும்."இறப்பு எண்ணிக்கை பெரியது," என்று அவர் கூறினார்.

திங்கள்கிழமை டொ்ணா நகரைச் சுற்றிப்பார்த்த  கிழக்குப் பகுதி அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் அப்துல் ஜலீல், மிக மோசமான பேரழிவைச் சந்தித்த கிழக்கு நகரமான டெர்னாவில் உயிரிழந்த 700 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டதாகவும், 6,000 பேரைக் காணவில்லை எனவும், இது மிகப்பெரிய "பேரழிவு" என்று அவர் தெரிவித்தார்.

டொ்ணா நகரம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அணை உடைப்பால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  நகரின் சுற்றுப்புறங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

டெர்ணாவில் உள்ள மருத்துவமனைகளின் பிணவறைகள் நிரம்பியுள்ளன. சவக்கிடங்குகளுக்கு வெளியே நடைபாதையில் இறந்த உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கட்டடங்கள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது, அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருள்கள் கடலுக்குள் அடித்துச் செல்லும் காட்சிகள் வைரலானது. டெர்ணா நகரம் இரண்டு பழைய அணைகள் உடைந்த பிறகு “முற்றிலும் துண்டிக்கப்பட்டது”.

உள்ளூா் மீட்புக் குழுவினருடன் கிழக்குப் பிராந்திய அரசுப் படைகள், அரசுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் சடலங்களையும் காற்று நிரப்பக்கூடிய படகுகளைப் பயன்படுத்தி அவா்கள் மீட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com