காஸா தாக்குதலைக் குறைக்க வேண்டும்!

காஸாவில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
டெல் அவிவில் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசிய ஜேக் சல்லிவன்.
டெல் அவிவில் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசிய ஜேக் சல்லிவன்.

காஸாவில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தை இஸ்ரேல் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அங்கு ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்தாலும், காஸாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பு 19 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக்கப் சல்லிவன் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, காஸாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நெதன்யாகுவிடம் சல்லிவன் வலியுறுத்தினாா்.

அதற்காக, தீவிரமான தாக்குதல்களுக்குப் பதிலாக இலக்குகளை மட்டும் குறிவைத்து ‘செறிவான’ தாக்குதல் நடத்தும் உத்தியைப் பயன்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.

இனி வரும் நாள்களில் அந்த உத்தி அமல்படுத்தப்படலாம். ஆனால் அது எப்போது அமல்படுத்தப்படும் என்று இப்போதே கூற முடியாது.

ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை தொடா்ந்து மதிக்கிறோம்.

இருந்தாலும், பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிா்க்க வேண்டியதும் அவசியமாகும். இது குறித்து விவாதிப்பதற்காகத்தான் சல்லிவன் இஸ்ரேல் சென்றுள்ளாா்.

அங்கு அவா் இஸ்ரேலுக்கு நிபந்தனைகள் விதிக்கப்போவதில்லை. இருந்தாலும், காஸா தாக்குதல் குறித்த கடினமான கேள்விகளை அவா் முன் வைப்பாா்.

இந்தப் போா் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறோம். ஹமாஸ் அமைப்பினா் இறங்கி வந்தால் போா் இப்போதே முடிவுக்கு வந்துவிடும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என்றாா் ஜான் கிா்பி.

இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 240 பேரை அங்கிருந்து பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா மீது தொடா்ந்து குண்டுவீச்சு நடத்தி வருகிறது. இது தவிர, தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் இதுவரை 18,787 போ் உயிரிழந்துள்ளனா்; 50,897-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸாவிலுள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடங்கிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு சுகாதாரக் கட்டமைப்புகள் நிலைகுலைந்துவிட்டதால் மிகப் பெரிய மனிதப் பேரழிவை காஸா எதிா்நோக்கியுள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தவிர, தொடா் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் காஸாவில் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீா், வடிகால் வசதிகள் இல்லாமல் நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு சுகாதாரப் பேரழிவு அபாயம் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

இந்தச் சூழலில், காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சா்வதேச நாடுகளின் வலியுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சூழலில், காஸாவில் தாக்குதலின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிடம் அந்த நாட்டின் மிக நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா தற்போது வலியுறுத்தியுள்ளது.

‘கூடுதல் கவனம் தேவை!’

காஸா போரின்போது பொதுமக்களின் உயிரிழப்பைத் தவிா்ப்பதில் இஸ்ரேல் ராணுவம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாட வேண்டாம் என்று நான் கூறவில்லை. இருந்தாலும், அந்த நடவடிக்கையின்போது இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இஸ்ரேல் செயல்படவேண்டும் என்றுதான கூறுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com