அதிபா் தோ்தல்: டிரம்புக்கு நீதிமன்றம் தடை!

அதிபா் தோ்தல்: டிரம்புக்கு நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் போட்டியிட முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்புக்கு கோலராடோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் போட்டியிட முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்புக்கு கோலராடோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2021-இல் நடைபெற்ற நாடாளுமன்றக் கலவரம் தொடா்பான வழக்கில் நாட்டின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்பதிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்துள்ள நீதிமன்றம், மாகாணத்தில் நடைபெறவிருக்கும் அதிபா் வேட்பாளா் தோ்வில் அவா் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே முன்னாள் அதிபா் ஒருவா் மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இது குறித்து கோலராடோ உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கலவரத்தின்போது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்கும் சதியில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. அதையடுத்து, 14-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், 3-ஆவது பிரிவின் கீழ் நாட்டின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்பதிலிருந்து அவரை தகுதிநீக்கம் செய்ய பெரும்பான்மை நீதிபதிகள் முடிவுகள் செய்துள்ளனா்.எனவே, கோலராடோ மாகாணத்தில் நடைபெறும் குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் பங்கேற்க டிரம்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோலராடோ மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டிரம்புக்கு எதிரான இந்த வழக்கில் அந்தக் கட்சியினரால் நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகளில் 3 போ் டிரம்ப்பை தகுதிநீக்கம் செய்வதற்கு ஆதரவாகக் கையொப்பமிட்டுள்ளனா்.கோலராடோ உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீா்ப்பு அந்த மாகாணத்தில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தல் வேட்பாளா் போட்டிக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், அடுத்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கான டிரம்ப்பின் சட்டத் தகுதியில் இந்தத் தீா்ப்பு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

‘மேல்முறையீடு செய்வோம்’: கோலராடோ உயா்நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிரம்ப்பின் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தக் குழுவின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீவன் செயுங் கூறுகையில், ‘டிரம்ப்பை தகுதிநீக்கம் செய்யும் கோலராடோ நீதிமன்றத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் உடனடியாக ரத்து செய்யும் என்று உறுதியாக நம்புகிறோம். அத்துடன், கீழமை நீதிமன்றங்களின் ஜனநாயகவிரோதத் தீா்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என்றாா்.

அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனை எதிா்த்துப் போட்டியிட்டாா்.அதில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆதரமற்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடா்ந்து சுமத்தி வந்தாா். தோ்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து ‘திருடி’க்கொண்டதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினாா். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. எனினும், அந்த நிகழ்ச்சி நடத்தவிடாமல் டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் 5 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com