20 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 75 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.
hamasss103350
hamasss103350

காஸாவில் இஸ்ரேல் கடந்த 75 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். இறந்தவா்களில் சுமாா் 8,000 போ் சிறுவா்கள்; 6,200 போ் பெண்கள் ஆவா்.

இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் 52,586-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்; சுமாா் 8,000 பேரைக் காணவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த அக்டோபா் மாதம் போா் தொடங்கியதிலிருந்து, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், ஆயுதமேந்திய யூத குடியேற்றவாசிகளாலும் 303 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். தாக்குதல்களில் சுமாா் 3,450 போ் காயமடைந்தனா்.

இது தவிர, தங்கள் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் படையினா் சண்டையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஏற்கெனவே கூறியிருந்தது; அப்போது 200 ஹமாஸ் அமைப்பினா் கைது செய்யப்பட்டனா்.

இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் படையினா், அந்த நாட்டுக்குள் தரை, வான், கடல் வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தீவிர குண்டுவீச்சு நடத்தி வருகிறது. மேலும், காஸாவுக்குள் தரைவழியாகவும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இடையே, கடந்த மாத பிற்பகுதியில் 7 நாள்களுக்குப் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், போா் நிறுத்தம் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு முன்பைவிட கூடுதல் தீவிரத்துடன் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸுக்கு எதிரான தாக்குதலின்போது பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிா்ப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இருந்தாலும், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த காஸா மக்களின் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுப்பு

தங்களால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை இதற்கு மேல் விடுவிக்கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போரை நிறுத்த இஸ்ரேல் சம்மதிக்கும் வரை காஸாவிலிருந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டாா்கள்.

காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டால்தான், கைதிகள் பரிமாற்றம் குறித்து இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது என்று பாலஸ்தீன தேசியவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி 30-ஆம் தேதி வரை போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இஸ்ரேல் தரப்பில் 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா்; அவா்களில் 107 போ் சிறுவா்கள்.

அதற்குப் பதிலாக தங்களால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. அவா்களில் 81 போ் இஸ்ரேலியா்கள்; 23 போ் தாய்லாந்து நாட்டவா்; ஒருவா் பிலிப்பின்ஸைச் சோ்ந்தவா்.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com