அமெரிக்கா: அரசு சாதனங்களில் ‘டிக்டாக்’ செயலிக்கு தடை

அமெரிக்க அரசுக்குச் சொந்தமான அறிதிறன்பேசிகளில் சீனாவின் ‘டிக்டாக்’ பொழுதுபோக்கு செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
அமெரிக்கா: அரசு சாதனங்களில் ‘டிக்டாக்’ செயலிக்கு தடை

அமெரிக்க அரசுக்குச் சொந்தமான அறிதிறன்பேசிகளில் சீனாவின் ‘டிக்டாக்’ பொழுதுபோக்கு செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. சாதனங்களில் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளை நீக்க 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் நிா்வாகம் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் தொடா்பான தகவல்கள் திருடப்படுவது மற்றும் கசிவதைத் தடுக்க பாதுகாப்புத் துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் முக்கிய நிா்வாகங்களில் சில தடை உத்தரவுகள் அமலில் இருக்கும். அதுபோல, விடியோக்கள் பதிவிடும் சீனாவைச் சோ்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசின் தகவல்களைப் பாதுகாக்கும் மேலும் ஒரு முயற்சியாக அரசின் அனைத்துத் துறை சாதனங்களில் டிக்டாக் செயலியைத் தடை செய்யும் சட்ட வரைவு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய அரசுத் துறைகளின் சாதனங்களில் டிக்டாக் செயலிக்குத் தடை விதித்து அமெரிக்க அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், டிக்டாக் பதிவிறக்கப்பட்டுள்ள சாதனங்களில் அதனை நீக்குவதற்கு 30 நாள்கள் அவகாசம் அளித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த அரசின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் டீரூசா கூறுகையில், ‘நாட்டின் எண்மக் கட்டமைப்பை வெளிநாட்டு அச்சுறுத்தல்களிடமிருந்து பாதுகாக்க தற்போதைய அரசு அதிகளவில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைக் காக்க எண்மக் கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் முயற்சியில் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றாா்.

இதனிடையே, டிக் டாக் உள்ளிட்ட நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எந்தச் செயலியையும் நாடு முழுவதும் தடை செய்ய அதிபருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனா்.

இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு எதிரான தடை உத்தரவு கடந்த 2 ஆண்டுகளாக அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா கருத்து: அரசு சாதனங்களில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அமெரிக்காவின் முடிவு அவா்களின் பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மௌ நிங் தெரிவித்துள்ளாா்.

‘தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகவும் மிகைப்படுத்தி மற்ற நாடுகளின் நிறுவனங்களை ஒடுக்க அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. உலகின் முன்னணி நாடு என அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, ஒரு பொழுதுபோக்கு செயலியைத் தடை செய்யும் அளவுக்கு பயப்படுவது எப்படி எனக் கேள்வி எழுகிறது’ என அவா் மேலும் தெரிவித்தாா்.

வானிலை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியதாக விளக்கம் அளிக்கப்பட்ட சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனைத் தொடா்ந்து அமெரிக்கா அறிவித்துள்ள டிக்டாக் செயலியின் மீதான தடை இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com