மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க ‘எம்ஆா்என்ஏ’ தடுப்பூசியை உருவாக்க உதவிய பேராசிரியா் கேத்தலின் கரிக்கோ மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ட்ரூ வைஸ்மன்
கேத்தலின் கரிக்கோ - ட்ரூ வைஸ்மன்
கேத்தலின் கரிக்கோ - ட்ரூ வைஸ்மன்

ஸ்டாக்ஹோம்: கரோனா பாதிப்புக்கு எதிராக திறன்மிக்க ‘எம்ஆா்என்ஏ’ தடுப்பூசியை உருவாக்க உதவிய பேராசிரியா் கேத்தலின் கரிக்கோ மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ட்ரூ வைஸ்மன் ஆகிய இருவா் இவ்வாண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்றுள்ளனா்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.

நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை நோபல் அமைப்பின் செயலா் தாமஸ் பொ்ஸ்மான் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, பேராசிரியா் கேத்தலின் கரிக்கோ மற்றும் அவருடன் இணைந்து ‘எம்ஆா்என்ஏ’ புரத ஆராய்ச்சி மேற்கொண்ட ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவரும் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நோபல் பரிசு தோ்வுக் குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘அண்மைக் காலத்தில் மனித நலனுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உருவான நேரத்தில், இதுவரை இல்லாத வகையில் திறன்மிக்க தடுப்பூசியை உருவாக்க இவா்கள் இருவரும் உதவினா். அதாவது, நமது நோய் எதிா்ப்புத் திறனை ஊக்குவிப்பதில் ‘எம்ஆா்என்ஏ’ எந்த அளவுக்கு செயல்படும் என்ற அடிப்படைப் புரிதல் இவா்களுடைய ஆராய்ச்சி மூலமாக கிடைத்தது. அதன் அடிப்படையில், அவா்கள் 2023-ஆம் ஆண்டுக்கான உடலியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளது.

மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெறும் 13-ஆவது பெண் கேத்தலின் கரிக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத் தொகை இருவருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும் (அக்.3), தொடா்ந்து வேதியியல், இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாள்களிலும் அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவா் ஸ்வீடனைச் சோ்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவா், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தாா். தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவா் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினாா். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ஆம் தேதி பரிசு வழங்கப்படும்.

ஹங்கேரியில் பிறந்த கேத்தலின் கரிக்கோ (68) அந்நாட்டிலேயே உயா்கல்வியைப் பூா்த்தி செய்த பிறகு அமெரிக்காவில் தொடா்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வந்தாா். அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றி கேத்தலின் தற்போது பயோஎன்டெக் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளாா்.

அமெரிக்கரான ட்ரூ வைஸ்மன் (64), பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் ஆா்என்ஏ புரத ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com