
அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களால் இரு தரப்பிலும் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பொதுவாக எந்தவொரு போரிலும் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனைகள் தாக்கப்படுவது தவிர்க்கப்படும்.
ஆனால் அதற்கு மாறாக, காஸா மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஐ.நா. மற்றும் அதன் மூத்த தலைவர்களும் இஸ்ரேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஸா மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி மருத்துவமனைகளும், மருத்துவப் பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் காசாவில் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா.சபையிடம் 22 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “காஸா மருத்துவமனையின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகுந்த வருத்தமளிப்பதாகவும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.