இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்க விசாவில் தளர்வு

அமெரிக்காவுக்கு பயணிக்கும் இஸ்ரேலியர்கள், 90 நாள்கள் அல்லது அதற்கும் குறைவாக விசா இல்லாமல் வந்து செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்க விசாவில் தளர்வு


வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு பயணிக்கும் இஸ்ரேலியர்கள், 90 நாள்கள் அல்லது அதற்கும் குறைவாக விசா இல்லாமல் வந்து செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா செப்டம்பர் 27 அன்று இஸ்ரேலை விசா தள்ளுபடி திட்டத்தில் அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 40 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தகுதி பெற்றிருந்தன. இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இஸ்ரேலும் இணைந்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, நவம்பர் 30ஆம் தேதி முதல் இஸ்ரேலியர்கள் விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

முன்னதாக, இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. மேலும், தாக்குதலின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் படையினா் கொல்லப்பட்டதாகவும் அந்த நாடு கூறியது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான அண்மைக் காலப் போரின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.

அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட சுமாா் 200 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 13 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல் அரசு, உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ளது.

காஸா பகுதியில் குடிநீா் இருப்பு வெகுவாகக் குறைந்து வருவதால், அங்கு சுகாதார நிலை பேரழிவின் விளிம்பில் இருப்பதாக அந்தப் பகுதியில் இயங்கி வரும் ‘ஆக்ஷன் அகெய்ன்ஸ்ட் ஹங்கா்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது சுமாா் 25,000 போ் தங்கியிருக்கும் தங்களது முகாமில் 60 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

எகிப்து எல்லை வழியாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து, அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் காஸா பகுதி அந்தப் பொருள்களுக்காக பரிதவிப்புடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com