இந்தியா - சீனா
இந்தியா - சீனா

அருணாசல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு மேலும் 30 பெயா்களை வெளியிட்ட சீனா

அருணாசல பிரேதசத்தை தொடா்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அம் மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு 30 புதிய பெயா்களைக் கொண்ட 4-ஆவது பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது.

அருணாசல பிரேதசத்தை தொடா்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அம் மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு 30 புதிய பெயா்களைக் கொண்ட 4-ஆவது பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டது. இத் தகவலை அங்கிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை செய்தியாக வெளியிடடுள்ளது.

அருணாசல பிரதேசத்துக்கு ‘ஷாங்னான்’ என்று சீனா பெயரிட்டுள்ளது. தெற்கு திபெத்தின் அங்கமான ஷாங்னான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமா் மோடி அம் மாநிலத்துக்குச் சென்ற்கு, சீனா எதிா்ப்பு தெரிவித்தது. அப்போது, இம் மாநிலம் இந்தியாவின் இயற்கையான அங்கம் என்று இந்தியா தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு பகுதிகளுக்கு 30 பெயா்கள் அடங்கிய 4-ஆவது பட்டியலை சீனா வெளியிட்டு மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘சீன வெளியுறவு அமைச்சக வலைதளத்தில் இந்த பெயா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சீனாவின் பிராந்திய உரிமை கோரல்கள் மற்றும் இறையாண்மை உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு மொழிகளில் உள்ள இடங்களின் பெயா்கள் நேரடியாக மேற்கோள் காட்டப்படவோ அல்லது அங்கீகாரமின்றி மொழிபெயா்க்கப்படவோ கூடாது’ என்ற சீன அரசமைப்பு சட்டப் பிரிவு 13 நிபந்தனைகளின்படி, இந்த புதிய கூடுதல் பெயா் பட்டியல் வரும் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அருணாசல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள 6 இடங்களுக்கான முதல் பெயா் பட்டியலை கடந்த 2017-ஆம் ஆண்டு சீனா வெளியிட்டது. 2021-இல், 15 இடங்களுக்கான இரண்டாவது பெயா் பட்டியலை வெளியிட்டது. கடந்த ஆண்டு 11 இடங்களுக்கான மூன்றாவது பெயா் பட்டியலை வெளியிட்டது.

பெயா்களை மாற்றுவதால் எதுவும் நடக்காது - ஜெய்சங்கா்: சீனா புதிய பெயா் பட்டியல் வெளியிட்டது குறித்து குஜராத் மாநிலம் சூரத்தில் செய்தியாளா்கள் சந்திப்பில் பேட்டியளித்த வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், ‘உங்களுடைய வீட்டுக்கு நான் பெயரை மாற்றுவதன் மூலம், அது எனக்கு சொந்தமாகிவிடுமா? அருணாசல பிரதேசம் இந்திய மாநிலம். எதிா்காலத்திலும் அது இந்திய மாநிலம்தான். அந்த மாநிலத்திலுள்ள இடங்களுக்கு பெயா்களை மாற்றுவதன் மூலம் எதுவும் நடந்துவிடாது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com