ராஃபா தாக்குதலுக்கு நாள் குறித்தாகிவிட்டது

ராஃபா தாக்குதலுக்கு நாள் குறித்தாகிவிட்டது

ஜெருசலேம்: போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான தேதி குறித்தாகிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ராஃபா மீது படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் அவர் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒடுக்குவதற்கு ராஃபா நகரம் மீது படையெடுப்பது அவசியமாகும். அந்த நகர் மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்ளப்போவது நிச்சயம்.

அதற்கான தேதி கூட குறிக்கப்பட்டுவிட்டது என்றார் அவர்.

எனினும், எந்தத் தேதியில் ராஃபா மீது இஸ்ரேல் ராணுவம் படையெடுக்கும் என்ற விவரத்தை அந்த விடியோவில் நெதன்யாகு குறிப்பிடவில்லை.

40,000 கூடாரங்கள்: இதற்கிடையே, ராஃபா மீது படையெடுப்பதற்கு முன்னதாக, அங்குள்ள மக்களை வெளியேற்றி தங்கவைப்பதற்காக 40,000 கூடாரங்களை வாங்கிவருவதாக இஸ்ரேல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறினர்.

முன்னதாக, காஸாவில் கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றிய கான் யூனிஸ் நகரிலிருந்து இஸ்ரேல் படையினர் ஞாயிற்றுக்கிழமை வெளியேறினர். ஹமாஸ் அமைப்பினர் கடைசியாக பதுங்கியுள்ள ராஃபா நகருக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு முன்னேற்பாடாகவே கான் யூனிஸிலிருந்து ராணுவ வீரர்கள் வெளியேறி வேறு பகுதிகளில் குழுமிவருகின்றனர் என்று அதிகாரிகள் கூறினர்.

ராஃபா நகர் மீது படையெடுக்கப்போவதாக இஸ்ரேல் பல வாரங்களாகவே கூறிவருகிறது. இருந்தாலும், பிற பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவத்தால் உத்தரவிடப்பட்ட பாலஸ்தீனர்கள், கடைசியாக அந்த நகரில்தான் தஞ்சமடைந்துள்ளனர். பாதுகாப்பு மண்டலமாக இஸ்ரேலால் முன்னர் அறிவிக்கப்பட்ட ராஃபாவில்தான் காஸா மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் - சுமார் 14 லட்சம் பேர் - தற்போது வசித்துவருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் படையெடுத்தால் மிகப் பெரிய உயிர்ச் சேதம் ஏற்படும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்த நிலையில், ராஃபா படையெடுப்புக்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளது, அந்த நாடுகளின் கண்டனங்களை அவர் புறக்கணித்துள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-இல் ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அத்துடன், சுமார் 250 பேரை அங்கிருந்து அவர்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.

அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com