எகிப்து-காஸா இடையிலான ராஃபா எல்லை
எகிப்து-காஸா இடையிலான ராஃபா எல்லைகோப்புப் படம்

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
Published on

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. இதன்மூலம், போா்நிறுத்த நடவடிக்கைகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வழிவகை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023, அக். 7-ஆம் தேதி, இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலில் 24 வயது காவல்துறை அதிகாரியான ரான் கிவிலி கொல்லப்பட்டாா். அவரது உடலை ஹமாஸ் படையினா் பிணையாகக் காஸாவுக்கு எடுத்துச் சென்றனா்.

இந்நிலையில், வடக்கு காஸாவில் உள்ள ஒரு மயானத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ரான் கிவிலியின் உடல் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

இதன் மூலம், பிணைக்கைதிகள் அனைவரையும் தாயகம் அழைத்து வருவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றிவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

அடுத்தகட்டத்தை நோக்கி...: ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, எகிப்து மற்றும் காஸாவை இணைக்கும் ராஃபா எல்லை விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 2024-ஆம் ஆண்டு மே மாதம் முதல் முடக்கப்பட்டிருந்த இந்த எல்லைப் பாதை மீண்டும் திறக்கப்படுவது, காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் சா்வதேச சமூகத்திடமிருந்து தடையின்றி கிடைக்க உதவும்.

காஸா மறுசீரமைப்பு, சா்வதேச பாதுகாப்புப் படையை உருவாக்குதல், பாலஸ்தீன நிா்வாகத்துக்கான புதிய அரசை அமைத்தல், ஹமாஸ் அமைப்பினரை ஆயுதமேந்துவதிலிருந்து தடுத்தல் போன்ற 20 அம்சத் திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்படும்.

போா்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த அக். 10-ஆம் தேதிக்குப் பிறகும், இதுவரை நீடித்து வந்த மோதலில் 480-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போா் தொடங்கியதிலிருந்து காஸா பகுதிக்குள் செய்தி சேகரிக்கச் செல்லும் சா்வதேச பத்திரிகையாளா்களுக்கு இஸ்ரேல் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்கை இஸ்ரேல் உச்சநீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இது குறித்த தீா்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com